’தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு வரி விலக்கு... முதல்வர் அதிரடி அறிவிப்பு

 

மத்தியப் பிரதேசத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு வரி விலக்கு அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

விபுல் ஷா தயாரிப்பில சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தி கேரளா ஸ்டோரி’. இந்தப் படத்தில் அதா சர்மா, பிரணவ் மிஷ்ரா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி, சித்தி இத்னானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் திரைப்படம் நேற்று வெளியாகி பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது. 

இந்தப் படத்தில் அப்பாவி இந்து பெண்களை குறிவைத்து மூளை சலவை செய்து இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டதாகவும், ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு அனுப்புவதாகவும் கேரளாவை சேர்ந்த பெண்கள் பலர் இவ்வாறு அனுப்பப்பட்டுள்ளதாகவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து படத்திற்கு எதிராக கண்டனம் மற்றும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்து வருகிறது. மேலும், படத்தை தடை செய்யக்கூறி நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் படம் வெளியாகும் திரையரங்குகளை முற்றுகையிட்டு போராட்டங்கள் நடத்தப்படுகிறது.

இது ஒரு புறம் இருக்க படத்திற்கான ஆதரவு குரல்கள் மறுபுறம் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி இப்படத்திற்கு ஆதரவான கருத்தை தெரிவித்தார். அழகான, உழைப்பாளி, திறமையான, அறிவான மக்களைக் கொண்ட கேரளா போன்ற சமூகத்தில் நிலவும் பயங்கரவாதத்தின் பாதிப்புகளை வெளிப்படுத்த தி கேரளா படம் முயற்சி செய்துள்ளது என்று அவர் கூறினார்.

இந்நிலையில், பாஜக ஆளும் மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு வரி விலக்கு அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் காணொலி ஒன்றை வெளியிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.