ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை சௌந்தராஜன்.. தென் சென்னையில் போட்டியா?

 

தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் பதவியில் இருந்து விலகுவதாக தமிழிசை சௌந்தராஜன் குடியரசுத்தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பாரம்பரியமான காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர் குமரி ஆனந்தன். இவரது மகள் தமிழிசை சௌந்தராஜன். இப்படிப்பட்ட அரசியல் பின்புலம் இருப்பினும்  பாஜகாவின் கொள்கைகள் மீதான காதலால் பாஜாகாவில் இணைந்தவர் தமிழிசை சௌந்தர்ராஜன். 2001-ல் தென் சென்னை கிளையின்  பாஜகாவின் மருத்துவச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 2005-ம் ஆண்டே தென்னிந்தியாவின் மருத்துவச் செயலாளராக தேர்ந்தெடுக்கப் படும் அளவிற்கு வளர்ந்தார்.

2007-ம் ஆண்டு மாநில பொதுச் செயலாளராகவும், 2010-ம் ஆண்டு மாநிலத் துணைத் தலைவராகவும் தொடர்ந்த இவரது அரசியல் பயணம் அபரிமிதமாக வளர்ந்து 2013-ம் ஆண்டு பாஜகாவின்  தேசியச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014-ம் ஆண்டிலிருந்து 2019 வரை தமிழ்நாடு பாஜக தலைவராகத் பணியாற்றினார். அந்த ஐந்து வருடங்கள் சுறுசுறுப்பாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்க உதவினார்.

நடந்து முடிந்த 2019 மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுகவின் கனிமொழியை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். அடுத்த சில மாதங்களில் தமிழிசை சௌந்தரராஜனை தெலங்கானா மாநில ஆளுநராக குடியரசுத் தலைவர் நியமித்தார். அதைத் தொடர்ந்து புதுவை துணைநிலை ஆளுநராக இருந்த கிரண் பேடி ராஜினாமா செய்த நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பையும் அவர் கூடுதலாக வகித்து வந்தார்.

ஆளுமை மிக்க பதவியான ஆளுநர் பதவியை வகித்தாலும் அவருக்கு தமிழ்நாடு அரசியல் மீது மிகுந்த ஆர்வம் இருந்து வந்தது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் தமிழ்நாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார். அத்துடன், கடந்த சில மாதங்களாக ஆளுநராக இருந்துகொண்டே தமிழ்நாடு அரசியல் குறித்து தமிழிசை சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார். பல நேரங்களில் திமுகவை நேரடியாகவே விமர்சித்தார். 

இந்த நிலையில் தனது தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு தமிழிசை சௌந்தரராஜன் இன்று கடிதம் எழுதினார். இதனால் தேர்தலில் அவர் போட்டியிடப்போவது உறுதியானது. அவர் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் இருந்து போட்டியிடுவார் என்பதாக கடந்த சில மாதங்களாக செய்திகள் பரவி வந்தது. ஆனால் அதை மறுத்துள்ள தமிழிசை சௌந்தரராஜன் தமிழ்நாட்டிலிருந்து தான் போட்டியிடப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனியார் ஊடகத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளது உண்மை தான். அரசியலில் மீண்டும் ஈடுபடுவதற்காகவே ராஜினாமா செய்துள்ளேன். மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் இருந்து தான் போட்டியிடுகிறேன். புதுச்சேரியில் போட்டியிடவில்லை. எந்த தொகுதியில் போட்டியிடுகிறேன் என்பதை பாஜக தலைமை முடிவு செய்யும்” என்று தெரிவித்துள்ளார். தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளராக அவர் அறிவிக்கப்படலாம் என்று பாஜக வட்டாரத்தில் பேசப்படுகிறது.