ரேஷன் கடைகளில் சர்க்கரை இலவசம்... வெளியான முக்கிய அறிவிப்பு!

 

சமூகத்தின் மிகவும் விளிம்புநிலைப் பிரிவினரான தேசிய உணவு பாதுகாப்பு அட்டைதாரர்களுக்கு இலவச சர்க்கரை வழங்கும் திட்டத்திற்கு டெல்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், டெல்லியில் உள்ள சமூகத்தின் மிகவும் விளிம்புநிலைப் பிரிவினரான தேசிய உணவு பாதுகாப்பு அட்டைதாரர்களுக்கு இலவச சர்க்கரை வழங்கும் திட்டத்திற்கு டெல்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று (ஆகஸ்ட் 21) இது தொடர்பான அமைச்சரவை முடிவுக்கு ஒப்புதல் அளித்ததை அடுத்து, இனி தேசிய உணவு பாதுகாப்பு அட்டைதாரர்களுக்கு இலவச சர்க்கரை வழங்கப்படும். பயனாளி குடும்பங்களுக்கு தற்போதுள்ள கோதுமை மற்றும் அரிசியுடன் சேர்த்து இலவச சர்க்கரையும் கிடைக்கும்.

இதன்மூலம் டெல்லியில் உள்ள 68,747 தேசிய உணவுப் பாதுகாப்பு அட்டைதாரர்கள் மற்றும் மொத்தம் 2,80,290 தனிநபர்கள் பயனடைவார்கள். இம்முயற்சிக்கான நிதி ஒதுக்கீடு ரூ.111 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது என முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த்யோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மானியத் திட்டத்தின் ஒரு பகுதியாக இலவச சர்க்கரை வழங்கப்படும். இந்த சலுகை ஜனவரி 2023 முதல் டிசம்பர் 2023 வரை ஒரு வருட காலத்திற்கு நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.