கடும் எதிர்ப்பு.. இந்திய மல்யுத்த சங்கம் சஸ்பெண்ட்.. ஒன்றிய அரசு அதிரடி அறிவிப்பு!

 

புதிதாக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட இந்திய மல்யுத்த சங்கத்தை ஒன்றிய அரசு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்திருந்த நிலையில், அண்மையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டங்களில் முக்கியப் பங்கு வகித்தவர் ஒலிம்பிக் மல்யுத்த பதக்க வீரரான சாக்‌ஷி மாலிக். பல்வேறு சர்ச்சைகள், விமர்சனங்கள், போராட்டத்திற்குப் பிறகு பிரிஜ் பூஷண் தலைமைப் பதவியிலிருந்து விலகினார்.

இதற்கிடையே, இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் தேர்தலில் பிரிஜ் பூஷணின் ஆதரவாளர்களை போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்று சாக்ஷி மாலிக், பஜ்ரங் பூனியா ஆகியோர் ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூரை சந்தித்து வலியுறுத்தினர். அதேவேளை, பிரிஜ் பூஷண் சரண் சிங் மல்யுத்த சம்மேளன தலைவர் தேர்தலில் போட்டியிடாத நிலையில் அவரது விசுவாசியான சஞ்சய் சிங் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனால் போராட்டத்தை முன்னின்று நடத்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்றவரான சாக்ஷி மாலிக் மல்யுத்த விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்தார். மேலும் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா பத்மஸ்ரீ விருதை ஒன்றிய அரசிடம் திரும்ப  ஒப்படைத்தார்.

இந்த நிலையில் புதிதாக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட இந்திய மல்யுத்த சங்கத்தை சஸ்பெண்ட் செய்து ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சகம்  உத்தரவிட்டுள்ளது. பாலியல் புகாருக்குள்ளான பிரிஜ் பூஷண் ஆதரவாளர்கள் நிர்வாகிகளாக தேர்வானதற்கு வீராங்கனைகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சகம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.