நிலத்தை தராததால் தாயின் தலையை வெட்டிக் கொன்ற மகன்.. உத்தர பிரதேசத்தில் கொடூரம்!
உத்தர பிரதேசத்தில் விவசாயத்திற்கு பயன்படும் கத்தியைக் கொண்டு தனது தாயின் தலையை மகனே துண்டித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டம் மேஜபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கமலா தேவி (65). இவரது கணவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இதனால் தனது மகன் தினேஷ் பாசி (35) என்பவருடன் கமலா தேவி வசித்து வந்தார். தினேஷ் மதுபோதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், தாயிடம் மகன் தினேஷ் சொத்தை தனது பெயருக்கு மாற்றித்தருமாறு அவ்வப்போது தகராறு செய்து வந்துள்ளார். இதற்கு கமலா தேவி மறுப்பு தெரிவித்து இருக்கிறார். சம்பவத்தன்று மதுபோதையில் தினேஷ் தாயிடம் பிரச்சனை செய்ய, அவர் சொத்துக்களை மாற்ற மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தினேஷ், விவசாயத்திற்கு பயன்படும் கத்தியைக் கொண்டு தனது தாயின் தலையை துண்டித்து கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து தினேஷ் தப்பி ஓடியுள்ளார். இதில் அவரது சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியில் உள்ள மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கமலா தேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தலைமறைவான தினேஷை தேடி வருகின்றனர்.