தங்கை மற்றும் போலீஸ் கணவர் ஆணவக்கொலை.. கோடாலியால் வெட்டி சாய்த்த அண்ணன்.. பஞ்சாபில் பரபரப்பு!

 

பஞ்சாபில் தங்கை மற்றும் அவரது கணவரை, பெண்ணின் அண்ணன் கோடாரியால் வெட்டிச் சாய்த்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள துங்வாலி கிராமத்தைச் சேர்ந்தவர் பியாந்த் கவுர். இவர், குடும்பத்தினர் விருப்பத்துக்கு மாறாக வீட்டைவிட்டு வெளியேறி, வேறு சமூகத்தை சேர்ந்த ஜக்மீத் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் பஞ்சாப் காவல்துறையில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். பிறந்த வீட்டுக்கு இழுக்கு சேரும் வகையில் மகள் பியாந்த் கவுர் செயல்பட்டதாக அவரது குடும்பத்தினர் வருந்தி வந்தனர்.

அதற்கேற்ப திருமணமான சில ஆண்டுகளில் ஜக்மீத் சிங் - பியாந்த் கவுர் தம்பதியர் இடையே கருத்து வேறுபாடு எழுந்தது. இதற்கு மனைவியின் குடும்பத்தினரே காரணம் என ஜக்மீத் சிங் ஆத்திரத்தில் இருந்தார். பலரையும் தூதுவிட்டு மனைவியை தன்னுடன் வாழ அனுப்புமாறு ஜக்மீத் சிங் மேற்கொண்ட முயற்சிகள் எடுபட வில்லை.

இந்த சூழலில் நேரடியாக மனைவி வீட்டுக்கே சென்று அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, அந்த கோர சம்பவம் நேரிட்டிருக்கிறது. குடும்பத்தினரின் விருப்பத்துக்கு மாறாக பியாந்த் கவுர் திருமணம் செய்ததால், அவரை விட மூத்த சகோதர சகோதரிகளுக்கு எவருக்கும் உறவினர்கள் வரன் தர விரும்பவில்லையாம். ஊரார் மத்தியில் அவப்பெயர், வீட்டிலிருந்த மற்றவர்களுக்கு திருமணம் தட்டிப்போனது, சுயமாக மணம் புரிந்த பியாந்த் கவுரும் கணவருடன் வாழாது பிறந்த வீடு திரும்பியது என அந்த குடும்பத்தினர் ஜக்மீத் சிங் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளனர்.

அதனை மேலும் அதிகமாக்குவதுபோல, நேற்றைய தினம் குடிபோதையில் அங்கு வந்த ஜக்மீத் சிங் தனது மனைவியை தன்னுடன் அனுப்புமாறு சத்தம் போட்டிருக்கிறார். வாய்த்தகராறு முற்றியதில் பெண்ணின் கணவருக்கும் பியாந்த் கவுரின் அண்ணன்களில் ஒருவருக்கும் இடையே மோதல் எழுந்தது. கோடாரியுடன் பாய்ந்த அண்ணன், தங்கையின் கணவரை வெட்ட முயன்றார். இதனை இடையில் பாய்ந்து தங்கை தடுக்க முயன்றார். ஆனால் எதிர்பாராத விதமாய், தங்கை மற்றும் அவரது போலீஸ் கணவர் என இருவரையுமே கோடாலியால் அண்ணன் வெட்டிச் சாய்த்துள்ளார்.