அதிர்ச்சி சம்பவம்.. கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட இளைஞர் பலி.. ஹோட்டலுக்கு சீல் வைப்பு..!

 

கேரளாவில் ஷவர்மா சாப்பிட்டதால் இளைஞர் ஒருவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் ராகுல் டி.நாயர் (24). இவர் கொச்சி காக்கநாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 18-ம் தேதி காக்கநாட்டில் உள்ள ஒரு ஓட்டலிலிருந்து ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து, ஷவர்மா மற்றும் மயோனைஸ் ஆகியவற்றை வாங்கிச் சாப்பிட்டுள்ளார். ஷவர்மா சாப்பிட்ட பின்பு ராகுல் டி.நாயருக்கு சற்று உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து 19-ம் தேதி மருத்துவமனைக்குச் சென்று மருந்து வாங்கி சாப்பிட்டுள்ளார். ஆனால் அவரது உடல்நிலை மிகவும்  மோசமானது. அதனால் கடந்த சனிக்கிழமை அவர் காக்கநாட்டில் உள்ள  ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வென்ட்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. 

இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் ராகுல் டி.நாயர் நேற்று மாலை உயிரிழந்தார். ஷவர்மா சாப்பிட்டதால் ஃபுட் பாய்சன் காரணமாக அவர் மரணம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. ராகுல் டி.நாயரின் உடல், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காக்கநாடு லே ஹையாத் என்ற ஓட்டலிலிருந்து வாங்கிய ஷவர்மாவைச் சாப்பிட்ட பிறகுதான் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக ராகுல் டி.நாயரின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் பேரில், திருக்காக்கரை நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் அந்த ஓட்டலுக்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும், ஓட்டலை மூடி சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். ஷவர்மா சாப்பிட்ட பின்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டு, இளைஞர் ஒருவர் மரணமடைந்த சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.