அதிர்ச்சி! ஏப்ரல் 1 முதல் அத்தியாவசிய மருந்து விலை 12 சதவீதம் உயர்வு!

 

ஏப்ரல் 1-ம் தேதி முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

அத்தியாவசிய மருந்துகளின் விலையை, தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் நிர்ணயம் செய்கிறது.ஒவ்வொரு ஆண்டும் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் மருந்து விலையை திருத்தி வருகிறது. 

இந்நிலையில், மூலப்பெருட்களின் விலை உயர்வு, உற்பத்தி செலவினம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் மருந்துகளின் விலையை அதிகரிக்க அனுமதிக்க வேண்டும் என, மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கோரிக்கை வைத்தன. இதை பரிசீலித்த ஒன்றிய அரசு, அத்தியாவசிய மருந்துகளின் விலையை, மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் அடிப்படையில், 12.12 சதவீதம் உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது. 

இந்த விலை உயர்வு மூலம் சந்தையில் எந்த மருந்துக்கும் தட்டுப்பாடு இருக்க கூடாது என்பதை உறுதி செய்யவும், இதேவேளையில் மருந்து உற்பத்தியாளர்கள் மற்றும் மக்கள் இந்த விலை கட்டுப்பாடு மூலம் பலன் பெறவும் விலை உயர்வு நிர்ணயம் செய்யப்படுகிறது என ஒன்றிய சுகாதார துறை அமைச்சர் தெரிவித்தார்.

அந்த வகையில் வலி நிவாரணிகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள், இதய நோய் மருந்துகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை வருகிற ஏப்ரல் மாதம் முதல் உயர்த்துவதற்கு மருந்து நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி காய்ச்சல், தொற்றுகள், தோல் நோய்கள், உயர் ரத்த அழுத்தம், ரத்த சோகை மற்றும் இதய நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் 800 அத்தியாவசிய மருந்துகளின் விலை 10.7 சதவீதம் வரை உயருகிறது.

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, பட்டியலில் இல்லாத மருந்துகளின் விலை, அனுமதிக்கப்பட்ட உயர்வை விட அதிகமாக அதிகரித்துள்ளது. பட்டியலில் இல்லாத விலைகள் 10 சதவீதம் வரை அதிகரிக்கப்படலாம். புதிய விலைகள் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.