விபத்தில் படுகாயம்.. சிகிச்சையின் போது ஏற்றப்பட்ட மாற்று ரத்தத்தால் இளைஞர் பரிதாப பலி!
ராஜஸ்தானில் மாற்று ரத்தம் ஏற்றப்பட்ட நிலையில் 2 சிறுநீரகங்களும் செயலிழந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டம் பண்டிஹு பகுதியைச் சேர்ந்தவர் சச்சின் சர்மா (23). இவர் கோட்புட்லி நகரில் சாலை விபத்தில் சிக்கிப் பலத்த காயம் அடைந்தார். அதைத் தொடர்ந்து, அவரை சுவாமி மான் சிங் (எஸ்.எம்.எஸ்) அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்குத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், அவருக்கு அதிக ரத்தம் வெளியேறியிருந்ததால், அவசரமாக ஓ பாஸிட்டிவ் ரத்தம் தேவைப்பட்டிருக்கிறது. அரசு மருத்துவமனையும் அவருக்கு ரத்தம் ஏற்றியிருக்கிறது. ஆனால், ரத்தம் ஏற்றப்பட்டதற்குப் பிறகுதான் அது ஓ பாஸிட்டிவ் அல்ல ஏபி பாஸிடிவ் ரத்தம் எனத் தெரியவந்திருக்கிறது.
மேலும், ரத்தம் மாற்றி ஏற்றப்பட்டதால், அவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் பாதிப்புக்குள்ளாகியது. இதைக் கவனித்த மருத்துவர்கள் உடனடியாக அவருக்கு டயாலிஸில் செய்து ஏபி பாஸிட்டிவ் ரத்தத்தை வெளியேற்றி ஓ பாஸிட்டிவ் ரத்தத்தை ஏற்றியிருக்கின்றனர். ஏற்கெனவே விபத்தில் சிக்கிக் காயமடைந்தவருக்கு டயாலிஸிஸ் செய்யப்பட்டதால், மேலும் அதிக பலவீனத்துடன் சிகிச்சை பெற்றுவந்தார்.
இது குறித்துப் பேசிய மருத்துவமனை கண்காணிப்பாளர் அச்சல் சர்மா, “டயாலிசிஸ் செய்யப்பட்டதால், அவருடைய உடல்நிலை மேலும் மோசமாகியிருக்கிறது. இந்த விவகாரம் குறித்து விசாரிக்கச் சிறப்புக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. விசாரணைக்குப் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் அவரது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்ததால், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.