மாணவர்களை கொடூரமாக தாக்கும் சீனியர்.. என்சிசி பயிற்சியில் ஈடுபட்டபோது நடந்த பயங்கரம்! அதிர்ச்சி வீடியோ

 

மகாராஷ்டிராவில் ஜூனியர் என்சிசி மாணவர்களை கொட்டு மழையில் மண் தரையில் படுக்க வைத்து கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்ட்ரா மாநிலம் தானே பகுதியில் பண்டோத்கர் கல்லூரி இயங்கி வருகிறது. இங்குள்ள என்சிசி மாணவர்கள் நேற்று முன்தினம் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதில் அணிவகுப்பு பயிற்சியின் போது சில மாணவர்கள் சரியாக செயல்படவில்லை எனக் கூறப்படுகிறது. பொதுவாக, இவ்வாறு தவறு செய்யும் என்சிசி மாணவர்களை மைதானத்தில் ஓடவிடுவது; கைகளை தூக்கி நிற்க வைப்பது போன்ற தண்டனைகள் வழங்கப்படுவது வழக்கம்.

இதை அந்த கல்லூரியின் என்சிசி. சீனியர் மாணவர் ஒருவர் பார்த்துள்ளார். உடனே அவர் பயிற்சியில் சரியாக செயல்படாத மாணவர்களை தனியாக அழைத்து சென்று தரையில் குப்புற படுக்க வைத்துள்ளார். அப்போது அங்கு மழை பெய்துள்ளது. இருந்தபோதும் மண்ணில் அந்த மாணவர்களை படுக்க வைத்த சீனியர் மாணவர் லத்தியால் என்சிசி மாணவர்களின் பின் பகுதியில் சரமாரியாக கம்பால் தாக்கி உள்ளார்.

இதுகுறித்து அந்த கல்லூரியின் முதல்வர் சுசித்ரா நாயக் கூறுகையில், இதுபோன்ற நடத்தையை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். மனநலம் பாதிக்கப்பட்டவர் போல சீனியர் மாணவர் நடந்து கொண்டுள்ளார். சக மாணவர்களை அவர் தாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

தேவைப்பட்டால் போலீசிலும் புகார் அளிக்கப்படும். அதே நேரம் என்சிசி மூலம் இங்கு நிறைய நல்ல பணிகள் நடைபெற்றுள்ளது. சுமார் 40 ஆண்டுகளாக இங்கு என்சிசி பயிற்சி நடக்கிறது. ஆசிரியர் இல்லாத நேரத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது என்று அவர் கூறினார்.