பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு பாரத ரத்னா.. பிரதமர் மோடி வாழ்த்து!
பாஜக மூத்த தலைவர் எல்.கே அத்வானிக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா, பாஜக மூத்த தலைவர் எல்.கே அத்வானிக்கு வழங்கப்பட உள்ளது. பாகிஸ்தானின் கராச்சியில் பிறந்த அத்வானி, ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிறுவன தலைவர்களுள் ஒருவர். ஆர்எஸ்எஸ்ஸின் அரசியல் இயக்கமான பாஜகவை வாஜ்பாயுடன் இணைந்து தொடங்கிய அவர், பாஜகவில் மிகப்பெரும் பொறுப்புகளை வகித்துள்ளார்.
அத்வானி மேற்கொண்ட ரத யாத்திரை முடிவில், உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் அத்வானி துணை பிரதமராக பதவி வகித்தார். 2009 நாடாளுமன்றத் தேர்தலின்போது பாஜகவின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார் அத்வானி. 2015-ம் ஆண்டு எல்.கே.அத்வானிக்கு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில், தற்போது நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஸ்ரீ எல்.கே.அத்வானி ஜிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளதை பகிர்ந்து கொள்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. நாட்டின் மிகப்பெரிய இந்த கௌரவம் குறித்து அத்வானியிடம் பேசி எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன்.
நம் காலத்தில் மிகவும் மதிக்கப்படும் அரசியல்வாதிகளில் ஒருவராக, அத்வானி ஜி இந்தியாவின் வளர்ச்சிக்கு செய்த பங்களிப்பு மகத்தானது. அடிமட்ட தொண்டனில் தொடங்கி நமது நாட்டின் துணை பிரதமராக உயர்ந்தவர். உள்துறை அமைச்சராகவும், தகவல் தொடர்பு துறை அமைச்சராகவும் சிறப்பாக பணியாற்றினார். அவரது நாடாளுமன்ற விவாதங்கள் முன்னுதாரணமாக இருந்துள்ளன.