பாறை மீது ஏறி செல்ஃபி.. ஆற்றில் தவறி விழுந்த புதுமணத் தம்பதி.. திருமணமான ஒரே வாரத்தில் நிகழ்ந்த சோகம்!!

 

கேரளாவில் பாறையில் நின்று செல்ஃபி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த புதுமண தம்பதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பாரிப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சித்திக் (29). இவரது மனைவி நவுபியா (25). இவர்கள் இருவருக்கும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் திருமணம் நடந்தது. இந்த நிலையில் புதுமண தம்பதி பாரிப்பள்ளியை அடுத்த பள்ளிக்கால் என்ற பகுதியில் உள்ள உறவினரான அன்சில் (28) என்பவருடைய வீட்டிற்கு விருந்துக்கு சென்றனர்.

நேற்று முன்தினம் மதிய விருந்தை முடித்து விட்டு மாலையில் சித்திக், நவுபியா பொழுதை உற்சாகமாக போக்குவதற்காக அருகில் உள்ள ஆற்றுப் பகுதிக்கு புறப்பட்டனர். உடன் அன்சில் குடும்பத்தினரும் சென்றனர். அப்போது புதுமண தம்பதி ஆற்றின் கரையோரம் இருந்த பாறையின் மேல் நின்று செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டனர்.

அதன்படி அதன் மீது ஏறி செல்ஃபி எடுத்த போது திடீரென ஆற்றுக்குள் தவறி விழுந்தனர். இதனால் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட இருவரும் அபய குரல் எழுப்பினர். உடனே அன்சில் காப்பாற்ற ஆற்றில் குதித்தார். ஆனால் அவரும் ஆற்றில் மூழ்கினார். இதனை கரையில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர், ஆற்றில் மூழ்கிய 3 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு அன்சில் பிணமாக மீட்கப்பட்டார். ஆனால் புதுமண தம்பதி உடல்கள் கிடைக்கவில்லை. அதே சமயத்தில் இரவு நேரமானதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. நேற்று காலையில் மீண்டும் தேடிய போது புதுமண தம்பதி உடல்கள் பாறை இடுக்கில் சிக்கியபடி இருந்ததை கண்டுபிடித்தனர்.

பின்னர் பிரேத பரிசோதனைக்காக இருவருடைய உடல்களும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்ஃபி எடுக்கும் ஆசையில் புதுமண தம்பதி உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.