கணவனின் முதல் மனைவியை 50 முறை கத்தியால் குத்திய 2வது மனைவி.. மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

 

மத்திய பிரதேசத்தில் கணவனின் முதல் மனைவியை இளம்பெண் 50 முறை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் ரிவா மாவட்டத்தை சேர்ந்தவர் ராம்பாபு வர்மா. இவர் 2019-ம் ஆண்டு ஜெயா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இப்போது ஜெயாவுக்கு 26 வயதாகிறது. இவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து, கடந்த 2021-ம் ஆண்டு மன்சி என்ற 22 வயது பெண்ணை, ராம்பாபு 2வதாக திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து, 3 பேருமே ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், தீபாவளியன்று இரவு ஜெயாவுக்கும், மன்சிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் கணவனின் முதல் மனைவியான ஜெயாவை, மன்சி கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். அதுவும் 50 முறை கத்தியால் குத்தியுள்ளார். இதனால் வலியால் ஜெயா அலறி துடித்ததையடுத்து, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கத்திக்குத்து தாக்குதல் நடத்திய மன்சியை கைது செய்து சிறையில் அடைத்து, இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டுள்ளனர். ஜெயாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவருக்கு நினைவு திரும்பினால்தான், அவரிடம் வாக்குமூலம் பெற முடியும் என்று போலீசார் கூறுகின்றனர். ஆனால், ஜெயாவின் நிலைமை சீரியஸாக உள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து அவரது உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருகிறார்கள். 22 வயது பெண், 26 வயது பெண்ணை 50 முறை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சி கலந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.