10 நாட்களில் 2வது முறை.. தெலுங்கானா எம்.எல்.ஏ. லாஸ்யா நந்திதா சாலை விபத்தில் பலி!

 

கார் விபத்தில் தெலுங்கானா எம்.எல்.ஏ. உயிரிழந்த சம்பவம் மாநில அரசியலில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் கண்டோன்மென்ட் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் லாஸ்யா நந்திதா (37). பாரத ராஷ்டிர சமிதி கட்சியை சேர்ந்தவரான இவர், இன்று காலை ஐதராபாத் ஓ.ஆர்.ஆர். சாலையில் தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த நந்திதா, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் நந்திதா வரும் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கார் ஓட்டுநர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1986 -ம் ஆண்டு ஐதராபாத்தில் பிறந்த லாஸ்யா நந்திதா, பத்தாண்டுகளுக்கு முன்பு அரசியலில் கால் பதித்தார். நந்திதாவின் தந்தை கடந்த வருடம் காலமான நிலையில், தந்தை போட்டியிட்ட தொகுதியிலேயே போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வாக தேர்வானார். கார் விபத்தில் தெலுங்கானா எம்.எல்.ஏ. உயிரிழந்த சம்பவம் மாநில அரசியலில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.