சுட்டெரிக்கும் வெயில், அனல் காற்று... பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் ஏப்ரல் 16 வரை மூட உத்தரவு!!

 

அனைத்து அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளை இன்று முதல் ஏப்ரல் 16 வரை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே வெப்பநிலையின் அளவு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. அடுத்த 5 நாட்களில் அதன் அளவு இன்னும் கூடும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. 

இந்த நிலையில், ஒடிசாவில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை அதிகரித்து வருகிறது. பரிபாடாவில் அதிகபட்ச வெப்பநிலை 41.6 டிகிரி செல்சியஸ் ஆகவும், மாநில தலைநகர் புவனேஸ்வரில் அதிகபட்ச வெப்பநிலை 40.7 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஒடிசா மாநிலம் முழுவதும் அதிகரித்து வரும் வெப்பநிலையைக் கருத்தில் கொண்டு, அனைத்து அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளை இன்று (ஏப்ரல் 12) முதல் ஏப்ரல் 16 வரை மூடுமாறு நிர்வாகத்திற்கு அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் சீரான குடிநீர் விநியோகம் மற்றும் மின்சாரம் சீராக வழங்கிட அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். தீவிரமான வெப்ப அலை நிலையைக் கருத்தில் கொண்டு, அங்கன்வாடிகள் மற்றும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், 12-ம் வகுப்பு வரை, இன்று முதல் ஏப்ரல் 16 வரை மூடப்படும் என்று முதல்வர் நவீன் பட்நாயக் அதிகாரப்பூர்வ உத்தரவில் தெரிவித்துள்ளார்.