பள்ளி மாணவர்களுக்கு ஸ்கூட்டர்... அமைச்சரவை எடுத்த அதிரடி முடிவு...!

 

அசாமில் பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் மட்டுமின்றி இலவசமாக ஸ்கூட்டர் வழங்கவும் அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

அசாம் மாநிலத்தில் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அசாம் மாநிலம் முழுவதும் உள்ள 4,372 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் 3.78 லட்சம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்குவதற்கு அம்மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

கவுகாத்தியில் நேற்று நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அரசு இ-மார்க்கெட்பிளேஸ் (ஜிஇஎம்) போர்டல் மூலம் சைக்கிள்களை வாங்குவதற்கு ரூ.167.95 கோடியை மாநில அரசு அனுமதித்துள்ளது.

இந்த திட்டம் குறித்து அசாம்‌ முதல்வர்‌ ஹிமந்த பிஸ்வா சர்மா கூறுகையில், 9ம்‌ வகுப்பு மாணவர்களுக்கு ரூ.167.95 கோடி செலவில்‌, 3.76 லட்சம்‌ சைக்கிள்கள்‌, மேல்நிலை தேர்வுகளில்‌ 75 சதவீதம் மேல்‌ மதிப்பெண்‌ பெற்றவர்களுக்கு சைக்கிள் இலவசமாக வழங்கும்‌ திட்டத்துக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல்‌. எங்கள்‌ அமைச்சரவையின்‌ இந்த முடிவு கல்வியை மேம்படுத்துவதற்கும்‌, மாணவர்களின்‌ திறனுக்கு சிறகுகளை வழங்குவதற்கும்‌ பெரும்‌ ஊக்கமாக இருக்கும்‌ என தெரிவித்துள்ளார்.

மேலும் அசாம் விவசாய பல்கலைக்கழகத்தில், ஓபிசி மற்றும், எம்ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு 15 விழுக்காட்டில் இருந்து 27 விழுக்காடாக உயர்த்தவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.