காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

 

கார்னிவல் திருவிழாவை முன்னிட்டு காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநில சுற்றுலாத்துறை மற்றும் காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் 4 நாட்கள் பொங்கல் விழா, கார்னிவெல் திருவிழா என்ற பெயரில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கார்னிவெல் திருவிழா கடந்த 14-ம் தேதி துவங்கியது. இதன் நிறைவு விழா நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது.

விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ரங்கசாமி மலர், காய் கண்காட்சியை பார்வையிட்டார். தொடர்ந்து படகுப் போட்டி, கபடி, ஷெட்டில், வாலிபல் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் மலர், காய் கனி கண்காட்சியில் வென்றவர்களுக்கு மலர் ரணி, மலர் ராஜா பரிசுகள் வழங்கினார்.

பின்னர் முதல்வர் பேசகையில், புதுச்சேரி அரசு மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மாணவர்களுக்கு லேப்டாப் வரும் 25-ம் தேதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். 

தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி காரைக்கால் கார்னிவல் விழாவை சிறப்பான முறையில் நடத்தியதற்காக மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கனுக்கு பொன்னாடை போர்த்தி, பாராட்டு தெரிவித்தார். நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், கார்னிவெல் திருவிழாவை முன்னிட்டு காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று (ஜன. 18) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.