இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

 

புகழ்பெற்ற மஸ்தான் சாகிப் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு காரைக்கால் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியா நாட்டை சேர்ந்த மஸ்தான் சாகிப் வலியுல்லா என்ற இறைதூதர், 18-ம் நூற்றாண்டில் இறைப்பணி மேற்கொள்ள இந்தியா வந்தார். அவர், இந்தியாவில், திருச்சி, நாகூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் தங்கி இறைப்பணி செய்தார்.

பின்னர் காரைக்காலில் தங்கி இருந்தபோது அவர் இயற்கை எய்தினார். அவரின் நினைவாக காரைக்காலில் கட்டப்பட்ட மஸ்தான் சாகிப் வலியுல்லா தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் நடப்பாண்டு இன்று (பிப்ரவரி 20) செவ்வாய்க்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதற்காக காரைக்கால் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று கண்ணாடி ரதம் மற்றும் பல்லக்கு ஊர்வலம் நடத்தப்பட்டு, தர்காவின் முன்பு நிறுவப்பட்ட பிரதானக் கொடிக் கம்பத்திலும், மினராக்களிலும் கொடிகள் ஏற்றப்படும்.

இதனை முன்னிட்டு கந்தூரி விழாவுக்கான  ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மஸ்தான் சாகிப் வலியுல்லாஹ் தர்கா கந்தூரி விழாவிற்காக இன்று பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் பிறப்பித்துள்ளார்.