சோகம்.. 12 வயது சிறுமி மயங்கி விழுந்து உயிரிழப்பு.. சபரிமலை கோவிலுக்கு செல்லும் போது விபரீதம்!

 

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் வழியில் தமிழ்நாட்டை சேர்ந்த 12 வயது சிறுமி பத்மஶ்ரீ மரணம் அடைந்தது பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.

மண்டல, மகரவிளக்கு பூஜைகளை முன்னிட்டு சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ம் தேதி திறக்கப்பட்டது. இதனை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். சபரிமலையில் 14 நாட்களில் சுமார் 8 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

சபரிமலைக்கு இருமுடி கட்டி வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் திருமலை திருப்பதியில் உள்ளது போல வரிசைகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் சரங்குத்தி அருகே இருந்தே வரிசைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். அங்கு பக்தர்கள் எத்தனை மணிநேரத்தில் தரிசனம் செய்ய முடியும் என்பது உள்ளிட்ட அறிவிப்பு பலகைகளுடன் அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சேலத்தைச் சேர்ந்த குமரன் - ஜெயலட்சுமி தம்பதிகளின் 12 வயது மகள் பத்மஸ்ரீ, அப்பகுதியை சேர்ந்த குழுவினருடன் சபரிமலைக்கு யாத்திரை சென்றிருந்தார். அப்பச்சிமேடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பத்மஸ்ரீ திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உடன் சென்றோர், அவரை மீட்டு அப்பச்சிமேடு மருத்துவ முகாமிற்கு அழைத்து சென்றனர். ஆனால், சிறுமி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து பத்மஸ்ரீயின் உடல் பிரேத பரிசோதனைக்காக பம்பா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிறுமிக்கு 3 வயதில் இருந்தே இதயநோய் இருந்து வந்ததாகவும், அதன் காரணமாகவே உயிரிழந்திருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.