தேசிய அடையாளம் ஆக சச்சின் டெண்டுல்கர் நியமனம்.. அங்கீகாரம் வழங்கி கௌரவித்தது தேர்தல் ஆணையம்!

 

தேசத்தின் அடையாளமாக சச்சின் டெண்டுல்கர் நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மேகாலயா ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடு பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது.

நேர்மையான முறையில் தேர்தலை நடத்தவும், வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தேர்தல் ஆணையம் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாட்டின் முகமாக சச்சின் டெண்டுல்கரை அங்கீகரிக்க இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வாக்களிப்பதன் அவசியம், நேர்மையான தேர்தல் உள்ளிட்டவை குறித்து சச்சின் டெண்டுல்கர் விழிப்புணர்வு ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை காலை 10.45 மணி அளவில் தேசத்தின் அடையாளமாக சச்சின் டெண்டுல்கர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பாரத ரத்னா விருது பெற்றவரான சச்சின், 6 உலக கோப்பை போட்டிகளில் விளையாடி உள்ளார். 2011-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை வென்ற அணியில் இடம் பெற்றிருந்த வீரர்களில் அவரும் ஒருவர். 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15,921 ரன்களை குவித்து, 53.78 பேட்டிங் சராசரி வைத்துள்ளார். இவற்றில் 51 சதம், 68 அரை சதங்களும் அடங்கும். அதிகபட்சம் 248 ரன்களை குவித்திருக்கிறார்.

இதேபோன்று, 463 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 18,426 ரன்களை குவித்திருக்கிறார். 44.83 பேட்டிங் சராசரி வைத்துள்ளார். அதிகபட்சம் 200 ரன்களை குவித்துள்ள அவர் 49 சதங்கள் மற்றும் 96 அரை சதங்களை எடுத்திருக்கிறார். ஒரெயோரு சர்வதேச டி20 போட்டியில் விளையாடி 10 ரன்கள் எடுத்திருக்கிறார்.

அவர் மொத்தம் 664 போட்டிகளில் 34,357 ரன்களை குவித்து, 48.52 பேட்டிங் சராசரி வைத்திருக்கிறார். மொத்தம் 100 சதங்கள் மற்றும் 164 அரை சதங்களும் குவித்திருக்கிறார். சர்வதேச கிரிக்கெட் போட்டி வரலாற்றில் ரன் குவிப்பில் முன்னணி வீரராக உள்ள அவர், சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை அடித்த ஒரே வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் தேர்தல் ஆணையம் சச்சினுக்கு உயர்ந்த கவுரவத்தை அளித்துள்ளது. இதற்காக நாளை நடைபெறவுள்ள விழாவில் சச்சினுக்கு இந்தியாவின் தேசிய அடையாளம் என்ற கவுரவ அங்கீகாரம் வழங்கப்படவுள்ளது. 3 ஆண்டுகளுக்கு சச்சின் தேர்தல் ஆணையம் வழங்கவுள்ள அடையாளத்துடன் இருப்பார்.