பெண்களுக்கு மாதம் ரூ.2000.. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அதிரடி அறிவிப்பு.. குஷியில் கர்நாடக பெண்கள்!!

 

அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.2,000 வழங்கப்படும் என கர்நாடக காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கர்நாடாகாவில் ஆளும் பாஜக அரசின் பதவிக்காலம் வரும் மே 24-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. மொத்தமுள்ள 244 தொகுதிக்கும் மே 10-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 20-ம் தேதி வரை நடைபெற்றது.

தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு வாரம் கூட முழுமையாக இல்லாத நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பாஜக சார்பில் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோரும் காங்கிரஸ் சார்பில் அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோரும் மக்களிடம் ஆதரவை திரட்டி வருகின்றனர். மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் தேவகவுடா, மூத்த தலைவர் குமாரசாமி உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கர்நாடக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளார். அதில் ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம், குறைந்த விலையில் உணவு வழங்கும் உணவகம், தினமும் அரை லிட்டர் இலவச பால் விநியோகம் உள்ளிட்ட பல கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. 

இந்நிலையில், கர்நாடகா சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்; அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் ஏராளமாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

வறுமை கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு 10 கிலோ உணவு தானியம், வேலை இல்லா பட்டதாரிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ரூ.3,000 நிதி உதவி, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், விவசாய கடன் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.