ரூ. 20 கோடி வேண்டும்.. தரலன்னா கொன்றுவிடுவோம்.. முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல்!
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானிக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக அறியப்படுபவர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவராக உள்ளார். இவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்துகொண்டிருக்கின்றன. அதனால், முகேஷ் அம்பானிக்குக் கடந்த 2013-ம் ஆண்டு முதல் ‘இசட்’ பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், 2021-ம் ஆண்டு மும்பையில் முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகே வெடிகுண்டு நிரப்பப்பட்ட கார் ஒன்று நின்றது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, அந்த பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் வகையில், அவருக்கான பாதுகாப்பு ‘இசட்’ பிரிவிலிருந்து ‘இசட் பிளஸ்’ ஆக உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில், முகேஷ் அம்பானியின் நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த மின்னஞ்சலில், “நீங்கள் எங்களுக்கு ரூ.20 கோடி தராவிட்டால், உங்களை (முகேஷ் அம்பானி) கொன்று விடுவோம். இந்தியாவிலேயே மிகச் சிறந்த துப்பாக்கி சுடும் வீரர்கள் எங்களிடம் உள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அம்பானியின் பாதுகாப்பு அதிகாரி மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கினர். அதன்படி விசாரணையில், மிரட்டல் விடுத்த நபர் ஷதாப் கான் என்பது தெரிய வந்துள்ளது. மும்பையின் காம்தேவி காவல்நிலையத்தில் பிரிவு 387, 506 (2) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.