ஆம்புலன்ஸுக்கு வழிவிடாவிட்டால்  ரூ.10,000 அபராதம்.. அரியானா அரசு அதிரடி அறிவிப்பு

 

அரியானாவில் ஆம்புலன்ஸுக்கு வழிவிடாத வாகன ஓட்டிகளுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று குருகிராம் போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

அரியானா மாநிலம், குருகிராம் நகரில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிடாமல் இடையூறு செய்பவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போக்குவரத்து துணை ஆணையர் விரேந்தர் விஜி கூறியதாவது, “மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 194இ கீழ் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட அவசர வாகனங்களுக்கு வழிவிடாமல் இடையூறு செய்பவர்களுக்கு ரூ. 10,000 அபராதம் அல்லது 6 மாதம் சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

மேலும், சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமிராக்கள் வாயிலாக இடையூறு ஏற்படுத்தும் வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு உடனடியாக ஆன்லைன் மூலம் அபராத ரசீது அனுப்பப்படும். ஏற்கெனவே குருகிராமில் ஆம்புலன்ஸ் மற்றும் உடல் உறுப்புகள் அவசரமாக எடுத்துச் செல்லும் வாகனங்கள் இடையூறு இல்லாமல் செல்வதற்கு காவல்துறையால் பச்சை வழித்தடம் அமைத்து தரப்படுகிறது.” என்றார்.