கோவில் உண்டியலில் ரூ.100 கோடிக்கு செக்.. கடவுளுக்கே பட்டை நாமம் போட்ட பக்தர்!
ஆந்திராவில் உள்ள கோவில் ஒன்றின் உண்டியலில் நபர் ஒருவர் 100 கோடி ரூபாய்க்கு செக் போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியில் சிம்மாசலம் அப்பாண்ணா வராஹலக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் 15 நாட்களுக்கு ஒருமுறை உண்டியல் காணிக்கை எண்ணப்படும். அதுபோல் நேற்று கோவில் அதிகாரிகள் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கோவில் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
உண்டியலில் பக்தர் ஒருவர் ஒரு காசோலையை காணிக்கையாக போட்டு உள்ளார். அதில் ‘100 கோடி ரூபாய்’ எழுதப்பட்டு இருந்தது. இதைபார்த்துதான் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். அதன்பிறகு உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். பலநூறு ஆண்டுகளாக கோவில் வரலாற்றில் நடக்காத இந்த விநோதத்தை உயர் அதிகாரிகள் கூட சந்தேகிக்கவில்லை. இது குறித்து அதிகாரிகள் விசாரிக்க தொடங்கினர்.
அதில் உள்ள விவரங்களின் அடிப்படையில், பொட்டேபள்ளி ராதாகிருஷ்ணாவின் சேமிப்பு கணக்கு காசோலை என்பது என தெரியவந்தது. காசோலை எம்விபி டபுள் ரோடு கிளையின் பெயரில் உள்ளது. அதிலும் வராஹலக்ஷ்மி நரசிம்ம தேவஸ்தானம் என்ற பெயரில் எழுதப்பட்ட காசோலையில் முதலில் 10 ரூபாய் என்றும், பிறகு அதை அடித்து 100 கோடி என்றும் எழுதப்பட்டிருப்பது தெரிந்ததும், அனைவருக்கும் ஆர்வமும், சந்தேகமும் ஏற்பட்டது.
உடனடியாக அதிகாரிகள் வங்கிக்கு சென்று பொட்டேபள்ளி ராதாகிருஷ்ணாவின் சேமிப்பு கணக்கு விவரத்தை கூறினர். அப்போது அவரது கணக்கில் ரூ.17 மட்டும் இருப்பு இருந்தது தெரியவந்தது.
காசோலை காணிக்கையாக போட்டவரின் விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிய, காசோலையை வங்கிக்கு அனுப்பி முழுமையான விவரங்களை எடுக்க கோவில் தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்த நபரின் விவரங்களைக் கண்டறிந்து, அவரைத் தொடர்பு கொண்டு, மீண்டும் இதுபோன்ற செயலில் ஈடுபடாமல் தடுக்க கோவில் நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.