பாலியல் துன்புறுத்தலுக்கு எதிர்ப்பு.. மாணவி உள்பட 10 பேர் மீது துப்பாக்கி சூடு.. உத்தர பிரதேசத்தில் அதிரெச்சி!
உத்தர பிரதேசத்தில் பாலியல் துன்புறுத்தலை எதிர்த்த மாணவி உள்பட 10 பேர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தில் பிந்தோ கிராமத்தில் வசித்து வரும் மாணவி ஒருவர் கல்லூரியில் பி.ஏ. படித்து வருகிறார். அவர் தினந்தோறும் கல்லூரிக்கு நடந்து சென்று வந்துள்ளார். இந்த நிலையில், ஜிதேந்திர திவாரி என்பவர் அந்த மாணவியை பின்தொடர்ந்து சென்று தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
கடந்த ஒரு வாரத்தில், கல்லூரிக்கு சென்ற அந்த மாணவியை அந்த நபர் விடாமல் தொந்தரவு செய்து வந்துள்ளார் என கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட அந்நபருக்கு மாணவி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில், திவாரி மற்றும் அவருடைய தந்தை என இருவரும் மாணவியின் வீட்டுக்கு சென்று துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் 10 பேர் வரை காயமடைந்து உள்ளனர். அவர்கள் அருகேயுள்ள சுகாதார நல மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். சிகிச்சைக்கு பின்னர் அவர்களின் நிலைமை சீரடைந்து உள்ளது. எனினும், அவர்களில் 7 பேர் மஹோபா மாவட்ட மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.