குஜராத் பல்கலைக்கழக விடுதியில் மதவழிபாடு.. முஸ்லீம் மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்.. வைரல் வீடியோ!

 

குஜராத் பல்கலைக்கழகத்தில் தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய பரபரப்பு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் குஜராத் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் இலங்கை, ஆப்கானிஸ்தான், கஜகஸ்தான், துர்க்மெனிஸ்தான், ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகள் உள்பட பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கல்லூரி விடுதியில் தங்கியுள்ளனர்.

இந்த நிலையில், பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கியுள்ள இலங்கை, ஆப்கானிஸ்தான், துர்க்மெனிஸ்தான், ஆப்பிரிக்காவை சேர்ந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவர்கள் சிலர் நேற்று இரவு 10.30 மணியளவில் பல்கலைக்கழக விடுதி வளாகத்தில் மதவழிபாடு செய்துள்ளனர்.

பல்கலைக்கழக விடுதி வளாகத்தில் உள்ள சுவர் அருகே மேடையில் வழிபாடு செய்துள்ளனர். சுவற்றில் அரபிய மொழியில் எழுதி அதன் அருகே மதவழிபாடு செய்துள்ளனர். அப்போது, அங்கு வந்த உள்ளூர் மாணவர்கள், இங்கு ஏன் வழிபாடு நடத்துகிறீர்கள், இஸ்லாமிய மத வழிபாட்டு தலத்திற்கு சென்று வழிபாடு நடத்துங்கள் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது, மதவழிபாடு செய்து கொண்டிருந்த ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஹரன் ஆப்கானி என்ற மாணவன் திடீரென எழுந்துவந்து கேள்வி எழுப்பிய உள்ளூர் மாணவர் ஒருவரின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால், இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அங்கு திரண்ட உள்ளூர் மாணவர்கள், வெளிநாட்டு மாணவர்கள் தங்கி இருந்த அறைகளை சூறையாடினர்.

உள்ளூர் மாணவர்கள் தாக்கியதில் வெளிநாடுகளை சேர்ந்த 2 மாணவர்களும் லேசான காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் விடுதி திரும்பிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மோதல் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும், மோதல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.