பாம்பு கடித்தவரை கங்கை நதியில் மிதக்கவிட்ட உறவினர்கள்.. மூடநம்பிகையால் பறிபோன இளைஞரின் உயிர்!

 

உத்தர பிரதேசத்தில் மூடநம்பிக்கையால் ஒரு இளைஞரின் உயிர் அநியாயமாக பறிபோய் இருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் புலன்சாகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜஹாங்கிராபாத் பகுதியில் உள்ள ஜெய்ராம்பூர் குடேனா பகுதியைச் சேர்ந்தவர் மோகித் (20). இவர் அங்குள்ள ஒரு கல்லூரியில் பி.காம் இறுதியாண்டு படித்து வந்துள்ளார். கடந்த ஏப்ரல் 26-ம் தேதி புலன்சாகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜஹாங்கிராபாத் பகுதிக்கு நாடாளுமன்ற தேர்தல் நடந்தது.

நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு செலுத்துவதற்காக ஜெய்ராம்பூர் குடேனா கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்து இருக்கிறார். அதன் பின்னர் ஏப்ரல் 26ம் தேதி அன்று நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்துவிட்டு வயல்வெளியில் நடந்து வந்துள்ளார். அப்போ பாம்பு கடிக்கு ஆளாகிய மோஹித், வயல்வெளியிலேயே மயங்கி விழுந்துள்ளார். இதனிடையே இளைஞர் மோஹித்தை பாம்பு கடித்த செய்தி குடும்பத்தினர் மற்றும் கிராம மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.

இதையடுத்து உறவினர்கள் சிலர் முதலில் அருகில் இருந்த மருத்துவரிடம் அழைத்துச் சென்று இருக்கிறார்கள் ஆனால் அவருக்கு உடனே நிவாரணம் கிடைக்கவில்லை. அவரது குடும்பத்தினர் அவரை அருகில் உள்ள பைகிரோவுக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. இதனிடையே கிராமத்தினர் சிலர், மருத்துவத்தால் பாம்புக்கடி சரி ஆகாது, ஓடும் கங்கை நீரில் உடம்பை வைத்திருந்தால் பாம்பு கடியின் விஷம் தானாக இறங்கி விடும் என்ற கூறியுள்ளனர்.

எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று நினைத்த குடும்பத்தினர் இந்த மூடநம்பிக்கையை உண்மை என்று நம்பினார்கள். அந்த மூடநம்பிக்கையால் அவந்திகா தேவி கங்கா காட் பகுதியில் கயிறு கட்டி இரண்டு தினங்களுக்கு மோகித்தின் உடலை கங்கை நதியில் போட்டு வைத்துள்ளார்கள். ஆனால் இந்த மூடநம்பிக்கை எதுவும் அந்த இளைஞரை காப்பாற்றவில்லை மாறாக பாம்பு விஷம் உடலில் ஏறி பரிதாபமாக அந்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.