ரேஷன் கடைகளில் இனி அரசிக்கு பதில் பணம்.. மாநில அரசு அசத்தல் அறிவிப்பு!!

 

கர்நாடகாவில் இலவச அரிசிக்கு பதில் ரூ.170 பணமாக வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று  சித்தராமையா தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. பின்னர் தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றத் தொடங்கி உள்ளது. குறிப்பாக அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் வரை இலவச மின்சாரம், அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.2,000, கர்நாடக அரசு பேருந்துகளில் அனைத்து பெண்களுக்கும் இலவச பயணம் போன்ற திட்டங்களை செயல்படுத்த முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு (பிபிஎல் கார்டுதாரர்கள்) மாதந்தோறும் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இன்று அம்மாநிலத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் நிலையில், அதில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

இதில் 5 கிலோ இலவச அரிசி ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது. மீதம் வழங்க வேண்டிய 5 கிலோ இலவச அரிசிக்குப் பதிலாக பணமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக அரிசி கொள்முதல் செய்ய முடியாத நிலை இருப்பதால் 5 கிலோ இலவச அரிசிக்குப் பதில் பணமாக வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

அதன்படி இலவச அரசி கிலோவுக்கு 34 ரூபாய் வீதம், 5 கிலோவுக்கு 170 ரூபாய் வழங்கப்பட உள்ளது. இந்த தொகையானது வரும் ஜூலை 1ம் தேதி முதல் வழங்கப்படும். இது தற்காலிக ஏற்பாடு மற்றும் அரிசி கொள்முதல் செய்யும் வரை மாற்று வழி என்று சட்டம் மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல் தெரிவித்துள்ளார்.