அயோத்தியில் ராமர் கோவில் குடமுழுக்கு... அரை நாள் விடுமுறை அறிவிப்பு வெளியிட்ட ஒன்றிய அரசு!

 

அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஏதுவாக அரைநாள் விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் குடமுழுக்கு விழா வருகிற 22-ம் தேதி பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் குடமுழுக்கையொட்டி ஒன்றிய அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் வரும் 22-ம் தேதி அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு விடுத்துள்ள அந்த அறிவிப்பில் வரும் 22-ம் தேதி மதியம் 2.30 மணி வரை அரை நாள் விடுமுறை விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவில் திறப்பு விழா நிகழ்ச்சியில் ஊழியர்கள் கலந்துகொள்ளும் விதமாகவும் டிவி உள்ளிட்டவற்றில் நிகழ்ச்சியை நேரலையில் காணவும் வசதியாக ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஜனவரி 22-ம் தேதி பகல் 12.20 மணிக்கு ராமர் கோவிலில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி தொடங்கி பல முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். அன்றைய தினம் நாடு முழுக்க பல பகுதிகளில் இருந்தும் பொதுமக்களும் அயோத்திக்கு வருகை தரவுள்ளனர்.