ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை உறுதி.. மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்த குஜராத் நீதிமன்றம்!

 

அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் விதித்த 2 ஆண்டுகள் தண்டனையை நிறுத்தி வைக்குமாறு, ராகுல் காந்தி தொடர்ந்த மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின் போது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என பேசியதாகவும், அவர் பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கியதாகவும் பாஜக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குஜராத் சூரத் நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. மேலும், தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக ராகுலுக்கு உடனடி பிணையும் வழங்கப்பட்டு உள்ளது. அதனால் அவர் தனது மக்களவை எம்.பி. பதவியை இழந்தார்.

அதை எதிர்த்து சூரத் செசன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ராகுல் காந்தி, அவதூறு வழக்கு தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கவும் கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு ஜாமீன் வழங்கிய செசன்ஸ் நீதிமன்றம், தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது. அதையடுத்து குஜராத் உயர்நீதிமன்றத்தை ராகுல் காந்தி நாடினார்.

கடந்த மே மாதம் நடந்த விசாரணையின் போது, அவதூறு வழக்கு தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்த உயர்நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் பிரச்சாக், கோடைகால விடுமுறைக்குப்பின் இறுதித்தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார்.

இந்த நிலையில் குஜராத் உயர்நீதிமன்றம் நேற்று வெளியிட்ட வழக்கு அட்டவணையின்படி, ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் இன்று 11 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.

சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது. அதில் தலையிட முடியாது எனவும். ராகுல்காந்தி மீது குறைந்தது 10 கிரிமனல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் குஜராத் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.