20 ரூபாய்க்கு தரமான உணவு.. ரயில் பயணிகளுக்கு சூப்பர் செய்தி.. அசத்தல் திட்டம்!

 

பொது பெட்டியில் பயணிக்கும் ரயில் பயணிகளுக்கு 20 ரூபாய்க்கு தரமான உணவு வழங்கும் திட்டத்தை ரயில்வே தொடங்கியுள்ளது.

இந்தியாவில் பெரும்பலான மக்கள் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். இதனால் ரயில்களில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ரயில்வே பயணிகளுக்கு அடிப்படை வசதிகளை உரிய முறையில் வழங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில் ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு தேவையான உணவு, குடிநீர், ஓய்வறை, டிக்கெட் சலுகை ஆகியவற்றை வழங்கி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக வடக்கு மண்டலத்தில் உள்ள 59 ரயில் நிலையங்களில் மலிவு விலைக்கு உணவு வழங்க ரயில்வே முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக 14 ரயில் நிலையங்களில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, முன்பதிவில்லாத பொது பெட்டிகள் நிற்கும் நடைமேடைகள் அருகே, இதற்காக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த விற்பனை கடைகள் மூலம் 7 பூரிகள், மசாலா கிழங்கு, ஊறுகாய் அடங்கிய உணவு ரூ. 20-க்கும், சாதம், பாவ் பஜ்ஜி, மசாலா தோசை உள்ளிட்ட உணவு வகைகள் ரூ.50-க்கும் விற்பனை செய்யப்பட உள்ளன. இந்தச் சேவை ஐஆர்சிடிசி மூலம் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

இந்த விற்பனை 6 மாத காலங்களுக்குச் சோதனை முறையில் மேற்கொள்ளப்பட்டது. தற்போது வரை 51 ரயில் நிலையங்களில் இந்த விற்பனை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் 13 ரயில் நிலையங்களில் இத்தகைய விற்பனை மையங்கள் வியாழக்கிழமை (ஜூலை 20) தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, ‘பொதுப் பெட்டிகளில் அதிக எண்ணிக்கையில் மக்கள் பயணிக்கும் நிலையில், அவா்களுக்கு வசதியாக இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை மையங்கள் மூலம் 200 மி.லி. அளவில் குடிநீா் விற்பனையைத் தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றனர்.