புரோட்டின் பவுடரால் உடலுக்கு ஆபத்து.. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை!!

 

புரோட்டீன் பவுடர் சாப்பிடுவதால் பாதிப்பு இருப்பதால் அதனை தவிர்க்கும்படி ஐசிஎம்ஆர் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.

உடல் ஆரோக்கியத்திற்காக ஜிம்முக்கு செல்லும் இளைஞர்கள், மத்தியில் இன்று மிகவும் பிரபலமான வார்த்தை புரோட்டீன் பவுடர் தான். அன்றாட உணவில் இருக்கும் புரோட்டீன் பற்றாக்குறையை சரி செய்யவும், விரைவான தசை வளர்ச்சிக்கும், இளைஞர்கள் நாடுவது Whey Protein எனப்படும் புரோட்டீன் பவுடர்கள் தான். இது ஒரு புறம் இருக்க சமீபத்தில் இந்திய அளவில் பிரபலமான 36 புரோடின் சப்ளிமெண்டுகள் 70 சதவீதம் தவறான புரதத் தகவல்களைக் கொண்டிருந்ததாக தகவல்கள் வெளிவந்தன. இதனை அடிப்படையாகக் கொண்டு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் புரோட்டின் பவுடர்களை ஆய்வு செய்தது.

அந்த வகையில் தற்போது ஐசிஎம்ஆர் புரோட்டின் பவுடர்களை உட்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தி அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் இயக்குனரான மருத்துவர் ஹேமலதா தலைமையிலான வல்லுநர்கள் அடங்கிய குழு, இது குறித்து பல்வேறு கட்ட ஆய்வுகளை மேற்கொண்டது. அந்த வகையில் இந்தியர்களுக்கான உணவு வழிகாட்டுதல்கள், உணவு பட்டியலை தற்போது வெளியிட்டிருக்கிறது. மேலும் புரோட்டின் பவுடர்களை தொடர்ந்து உட்கொள்ளும்போது எலும்பு தாது இழப்பு, சிறுநீரக பாதிப்பு போன்ற உபாதைகள் ஏற்படும் எனவும் எச்சரிக்கையை விடுத்து இருக்கிறது.

மேலும் புரோட்டின் பவுடர்களை தொடர்ந்து உட்கொள்ளும் போது உடலுக்கு தேவையான கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு குறைவதாகவும் புரோட்டின் அதிகரிக்கும்போது உடலில் தேவையற்ற உபாதைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் இந்த புரோட்டீன் பவுடர்கள் முட்டை, பால் சார்ந்த பொருட்கள், சோயா பீன்ஸ், பட்டாணி, அரிசி ஆகியவற்றிலிருந்து புரோட்டீன்களை தனியாக பிரித்து அதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.

அதிகப்படியான புரோட்டீன்கள் மற்றும் குறைந்த அளவிலான கொழுப்பு, கார்போஹைட்ரேட் இந்த பவுடரில் இருக்கும் என்பதுதான் இதன் அளவுகோலாகும். ஆனால் சந்தைகளில் கிடைக்கும் புரோட்டின் பவுடர்களில் சர்க்கரை, கலோரிகள் இல்லாத இனிப்புகள், செயற்கை நிறமிகள் பயன்படுத்தப்படுவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த புரோட்டின் பவுடரை தொடர்ந்து உட்கொள்வது மூலமாக பல்வேறு உடல்நல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது எனவும் கூறியுள்ளது.

சமச்சீரான மற்றும் சீரான உணவை எடுத்துக்கொள்வது உடலுக்கு முழுமையான வலிமையை தரும் என ஐசிஎம்ஆர் அறிவுறுத்திருக்கிறது. மேலும் புரோட்டின் பவுடர்களை அதிக அளவில் எடுத்துக் கொள்வதை தவிர்த்து, இயற்கை மற்றும் தானிய உணவையும் எடுத்துக்கொள்வது சரியாக இருக்கும் என கூறியிருக்கிறார்கள். மேலும் இந்த புரோட்டீன் பவுடர்களை தொடர்ந்து எடுத்துக் கொள்வதன் மூலமாக தசையின் அளவு அதிகரிக்கும் என்கிற தவறான கருத்து ஜிம் செல்வோர் மத்தியிலும் விளையாட்டு வீரர்கள் மத்தியிலும் இருப்பதற்கு கவலை தெரிவித்து இருக்கிறது.