ஆபரேஷன் தியேட்டரில் வருங்கால மனைவியுடன் ‘Pre Wedding Photo Shoot’.. மருத்துவர் மீது பாய்ந்தது நடவடிக்கை!
கர்நாடகாவில் அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அறையில் வருங்கால மனைவியுடன் மருத்துவர் ஒருவர் போட்டோ ஷூட் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அறையில் மருத்துவர் ஒருவர் தன்னுடைய வருங்கால மனைவியுடன் திருமண போட்டோ ஷூட் நடத்திய நிகழ்வு தற்போது வெளியில் தெரியவந்திருக்கிறது. இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை அன்று நடந்ததாகக் கூறப்படும் நிலையில், இந்த போட்டோ ஷூட் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது.
அந்த வீடியோவில், ஆண் மருத்துவர் தன்னுடைய வருங்கால மனைவியுடன், சிகிச்சை அறையில் மருத்துவ உபகரணங்களுடன் ஒருவருக்கு சிகிச்சை செய்வதுபோல நடிக்க, புகைப்படக்காரர்கள் படம் எடுத்து கொண்டிருந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவ, இதனை அறிந்த மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட மருத்துவரை பணிநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்திருக்கிறது.
இதுகுறித்து சித்ரதுர்கா மாவட்ட மருத்துவ அதிகாரி ரேணு பிரசாத் கூறுகையில், “தேசிய சுகாதார இயக்கம் (NHM) மூலம் ஒரு மாதத்துக்கு முன்பு அவரை மருத்துவ அதிகாரியாக ஒப்பந்த அடிப்படையில் நியமித்தோம். இந்த சம்பவத்தில் வரும் அறுவை சிகிச்சை அறை செப்டம்பர் முதல் செயல்பாட்டில் இல்லை. தற்போது அது பழுதுபார்க்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.
மேலும், கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறுகையில், “சித்ரதுர்கா அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அறையில் திருமண போட்டோ ஷூட் நடத்திய மருத்துவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். அரசு மருத்துவமனைகள் மக்களின் சுகாதாரத்துக்காக இருக்கிறதே தவிர, தனிப்பட்ட வேலைக்காக அல்ல. எனவே மருத்துவர்களின் இத்தகைய ஒழுங்கீனத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாது.