காதல் மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற போலீஸ்காரர்.. எஸ்பி அலுவலகத்தில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!

 

கர்நாடகாவில் பட்டப்பகலில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் மனைவியை போலீஸ்காரரே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் லோக்நாத் (43). இவரும், ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணாவை சேர்ந்த மம்தா (38) என்பவரும் காதலித்து கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். லோக்நாத், ஹாசன் அருகே உள்ள சாந்தி கிராமம் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இதனால் அவர்கள், குடும்பத்துடன் ஹாசனில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 5 நாட்களாக குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் தன்னை கொடுமைப்படுத்துவதாக உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் அளிப்பதாக மம்தா, லோக்நாத்திடம் கூறி வந்தார். நேற்று காலையும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது மம்தாவை, லோக்நாத் அடித்து உதைத்துவிட்டு பணிக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கணவர் லோக்நாத் மீது புகார் அளிக்க மம்தா, நேற்று காலை ஹாசன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தார். இதனை அறிந்த லோக்நாத், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு விரைந்து சென்றார். பின்னர் மனைவி மம்தாவை அவர் தடுத்து நிறுத்தினார். மேலும் வீட்டுக்கு செல்லும்படி வற்புறுத்தி உள்ளார். ஆனால் அதற்கு மறுத்த மம்தா, போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து என்னை நீ கொடுமைப்படுத்துவதாக புகார் அளிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் தலைக்கேறிய நிலையில், தான் வைத்திருந்த கத்தியை எடுத்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் வைத்தே, மனைவி மம்தாவின் வயிறு மற்றும் மார்பில் சரமாரியாக குத்தினார். இதில் பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த மம்தா, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதனை பார்த்து அங்கிருந்த போலீஸ்காரர்கள், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

இதையடுத்து போலீஸ்காரர்கள் விரைந்து வந்து லோக்நாத்தை பிடித்து கொண்டனர். மேலும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய மம்தாவை மீட்டு உடனடியாக ஹாசன் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி மம்தா பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், குடும்ப தகராறு காரணமாக தன் மீது போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளிக்க வந்ததால், லோக்நாத் தனது மனைவியை கத்தியால் குத்தி படுகொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் லோக்நாத்தை கைது செய்தனர். இதுகுறித்து ஹாசன் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

இதற்கிடையே மம்தாவின் தந்தை சாமண்ணா ஹாசன் டவுன் காவல் நிலையத்தில் லோக்நாத் மீது புகார் அளித்துள்ளார். அதில், திருமணமானது முதல் பணம், நிலம் கேட்டு எனது மகள் மம்தாவை லோக்நாத் தொல்லை கொடுத்து வந்தார். தினமும் தகராறு செய்து வந்தார். இத்தனை ஆண்டுகள் எனது மகள் அவருடன் சகித்து கொண்டு வாழ்ந்து வந்தார். அவரது தொல்லை எல்லை மீறி சென்றதால், நாங்கள் தான் லோக்நாத் மீது உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் அளிக்க கூறினோம். தற்போது அவரை லோக்நாத் கொன்றுவிட்டார். அவருக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என்றார்.