கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமர் மோடி படம் திடீர் நீக்கம்.. சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்

 

கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்படலாம் என உறுதியாகியுள்ள நிலையில், கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா தொற்று மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. அமெரிக்கா தொடங்கி ஆஸ்திரேலியா வரை அனைத்து நாடுகளிலும் கொரோனா பாதிப்பு மிக மோசமாக இருந்தது. அதில் இருந்து மீண்டு வரவே நமக்கு சில ஆண்டுகள் ஆகிவிட்டது. கொரோனா பாதிப்பில் இருந்து நாம் மீண்டு வர கொரோனா தடுப்பூசி முக்கிய காரணமாக இருந்தது. 

அந்த வகையில் கோவிஷீல்டு தடுப்பூசியை ஆஸ்ட்ராஜெனக்கா நிறுவனமும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகமும் இணைந்து உருவாக்கியது. அதனை சீரம் இஸ்ட்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனம் தயாரித்தது. இந்நிலையில் அதன் பக்கவிளைவுகள் பற்றிய சமீபத்திய செய்திகள் கவனம் பெற்று வருகின்றன.

சில தினங்கள் முன் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியால் அரிதாக சில பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதனை உருவாக்கிய ஆஸ்ட்ரஜெனக்கா நிறுவனம் சமீபத்தில் ஒப்புக்கொண்டது. கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதாக ரத்தம் உறைதல், ரத்தத் தட்டுக்களின் (பிளேட்லட்) அளவு குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஆஸ்ட்ராஜெனக்கா நிறுவனம் தெரிவித்தது.

இதன்தொடர்ச்சியாக இந்தியாவில் இந்த ஊசி செலுத்தியவர்களுக்கு வழங்கப்படும் கோவின் (CoWIN) சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் அகற்றப்பட்டுள்ளது. முன்னதாக, கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு வழங்கப்படும் இந்த கோவின் சான்றிதழ்களில் பிரதமர் மோடியின் உருவமும், கூடவே, “ஒன்றாக இணைந்து, இந்தியா கோவிட்-19-ஐ தோற்கடிக்கும்” - என்ற வாசகமும் இடம்பெற்றிருக்கும். ஆனால், தற்போது இதில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெறவில்லை. எக்ஸ் தள பயனர்கள் பிரதமர் மோடியின் புகைப்பட நீக்கம் குறித்து பதிவிட்டு கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் நீக்கம் குறித்து பேசிய சுகாதார அமைச்சக அதிகாரிகள், “மக்களவைத் தேர்தலுக்கான நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து மோடியின் புகைப்படம் நீக்கப்படுவது இது முதல் முறை அல்ல. 2022ம் ஆண்டில், நடந்த உத்தரபிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய ஐந்து மாநில தேர்தல்களின்போதும் பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளனர்.