6-ம் கட்ட நாடாளுமன்ற தேர்தல்: 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது.. மக்கள் விறுவிறு வாக்குப்பதிவு

 

நாடு முழுவதும் 6-ம் கட்டத் தேர்தலை ஒட்டி 57 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26-ம் தேதியும், 93 தொகுதிகளுக்கு 3-ம் கட்ட தேர்தல் கடந்த 7-ம் தேதியும், 96 தொகுதிகளுக்கு 4-ம் கட்ட தேர்தல் கடந்த 13-ம் தேதியும், 49 தொகுதிகளுக்கு 5-ம் கட்ட தேர்தல் கடந்த 20-ம் தேதியும் நடைபெற்றது.

இந்த நிலையில், 58 தொகுதிகளுக்கு இன்று 6-ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளும், உத்தரப்பிரதேசத்தில் 14 தொகுதிகளும், அரியாணா மாநிலத்தில் உள்ள 10 தொகுதிகளும், பீகார் மற்றும் மேற்குவங்கத்தில் தலா 8 தொகுதிகளும், ஒடிசாவில் 6 தொகுதிகளும், ஜார்க்கண்டில் 4 தொகுதிகளும், ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதியிலும் தேர்தல் நடைபெறுகிறது.

இந்த மக்களவைத் தேர்தலுடன் ஒடிசா மாநிலத்தில் உள்ள 42 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடையும். மக்கள் காலையில் இருந்தே ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்கினைப் பதிவு செய்து வருகிறார்கள்.