4-ம் கட்ட நாடாளுமன்ற தேர்தல்: 96 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது.. மக்கள் விறுவிறு வாக்குப்பதிவு
நாடு முழுவதும் 4-ம் கட்டத் தேர்தலை ஒட்டி 96 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த 19-ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் கடந்த 26-ம் தேதியும், 93 தொகுதிகளுக்கு கடந்த 7-ம் தேதியும் நடைபெற்றது. இந்த நிலையில், 96 தொகுதிகளுக்கு இன்று 4-ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். ஆந்திராவின் 25 தொகுதிகளுக்கும் தெலங்கானாவின்17 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. ஒடிசா (4), பீகார் (5), ஜார்க்கண்ட் (4), மத்திய பிரதேம் (8), மகாராஷ்டிரா (11), உத்தர பிரதேசம் (13), மேற்கு வங்கம் (8), காஷ்மீரில் ஸ்ரீநகர் உள்ளிட்ட மக்களவை தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்று வருகிறது.
உத்தர பிரதேசத்தின் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் போட்டியிடும் கன்னோஜ் தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அவரை எதிர்த்து பாஜக சார்பில் சுப்ரதா பதக் களம் காண்கிறார். மேற்கு வங்கத்தின் கிருஷ்ணா நகர் தொகுதியில் ஆளும் திரிணாமூல் சார்பில் மஹுவா மொய்த்ராவும், பாஜக சர்பில் அம்ரிதா ராயும் போட்டியிடுகின்றனர்.
மேற்கு வங்கத்தின் பகரம்பூரில் திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் கிரிக்கெட் வீரர் யூசூப் பதான் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, பாஜக சார்பில் நிர்மல் சந்திர சகா ஆகியோர் களத்தில் உள்ளனர்.
பீகாரின் பெகுசராய் தொகுதியில் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான கிரிராஜ் சிங் போட்டியிடுகிறார். தெலங்கானாவில் ஹைதராபாத் தொகுதியில் ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசியும் அவரை எதிர்த்து பாஜக சார்பில் நடிகை மாதவி லதா களமிறங்கி உள்ளார்.