இன்னும் சில வாரங்களில் நாடாளுமன்ற தேர்தல்.. தேர்தல் ஆணையர் திடீர் ராஜினாமா.. என்ன காரணம்?

 

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில வாரங்களே உள்ள நிலையில் அருண் கோயல் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் சென்று அரசியல் கட்சிகள் மற்றும் மாநில அதிகரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வந்தனர்.

மார்ச் 2-வது வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் தேர்தல் பணி நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் ஆணையர் பொறுப்பில் இருந்து அருண் கோயல் இன்று திடீரென்று ராஜினாமா செய்துள்ளார். ஏற்கனவே ஒரு தேர்தல் ஆணையர் பணியிடம் காலியாக இருந்த நிலையில், தற்போது அருண் கோயலும் ராஜினாமா செய்துள்ளார்.

இதனால், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே உள்ளார். தேர்தல் ஆணையராக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அருண் கோயல் நியமிக்கப்பட்டார். அருண் கோயல் கடந்த கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் 21-ல் பொறுப்பேற்றார். இவரது பதவிக்காலம் வரும் 2027-ம் ஆண்டு வரை உள்ள நிலையில், இன்று தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

பதவியேற்று ஓராண்டு கூட ஆகாத நிலையில் தனது பதவியை அருண் கோயல் ராஜினாமா செய்துள்ளார். அதிலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பாக ராஜினாமா செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக அருண் கோயல் பதவியேற்கும் போதே விமர்சனங்கள் எழுந்திருந்தன.

அதாவது, அருண் கோயல் 1985 பஞ்சாப் கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். இவர் மத்திய கனரக தொழிற்சாலை அமைச்சகத்தின் செயலாளராக பதவி வகித்து வந்தார். கடந்த ஆண்டு நவம்பர் 31-ம் தேதியுடன் ஓய்வுபெற இருந்த அருண் கோயல் 6 வாரங்களுக்கு முன்பாக ஓய்வுபெறுவதாக கூறி தன்னுடைய வி.ஆர்.எஸ். கடிதத்தை வழங்கினார்.