காதலுக்கு எதிர்ப்பு.. விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடி.. காதலன் பரிதாப பலி!

 
கர்நாடகாவில் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதால் இருவரும் தற்கொலைக்கு முயன்ற நிலையில், காதலன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா தாலுகா நகரனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜு (24). பட்டதாரியான இவர் மைசூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரும், ஒலேநரசிப்புரா டவுன் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியும் காதலித்து வந்தனர். அந்த சிறுமி அப்பகுதியில் உள்ள ஒரு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார்.

இவர்களது காதலுக்கு சிறுமியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 18 வயது நிரம்பாத நிலையில் காதல், திருமணம் போன்ற எந்தவொரு முடிவையும் எடுக்கக்கூடாது என்று அறிவுறுத்தினர். ஆனால் சிறுமி, தனது காதலில் உறுதியாக இருந்தார். இதுகுறித்து அவர் தனது காதலன் ராஜுவிடம் கூறினர்.

பின்னர் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி இருவரும் விஷம் குடித்துவிட்டு ஒலேநரசிப்புரா டவுனில் உள்ள ஹேமாவதி ஆற்றுப்பாலம் வழியாக செல்லும் ரயில்வே மேம்பாலத்தில் தண்டவாளத்தில் படுத்துக் கொண்டனர். இதைக் கண்ட போலீசார் விரைந்து வந்து அவர்களை மீட்டு விசாரித்தனர்.

அப்போது இருவரும் காதலர்கள் என்பதும், காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் விஷம் குடித்துவிட்டு தண்டவாளத்தில் படுத்திருப்பதும் தெரியவந்தது. அதையடுத்து போலீசார் ராஜுவையும், அவரது காதலியையும் மீட்டு சிகிச்சைக்காக ஹாசன் ஹிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராஜு பரிதாபமாக உயிரிழந்தார். அவரது காதலி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து ஒலேநரசிப்புரா டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.