கொசு மருந்தை குடித்த ஒன்றரை வயது குழந்தை பரிதாப பலி.. கேரளாவில் அதிர்ச்சி!

 

கேரளாவில் கொசு மருந்தை தவறுதலாக குடித்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ரம்ஷீத். இவரது மனைவி அன்ஷிபா. இந்த தம்பதிக்கு ஒன்றரை மாத பெண் குழந்தை ஜாஸா உட்பட 2 பெண் குழந்தைகள் இருந்தனர். ரம்ஷீத் வளைகுடா நாடு ஒன்றில் பணியாற்றி வருகிறார். அன்ஷிபா பராமரிப்பில் குழந்தைகள் இருவரும் இருந்து வந்தனர். கடந்த 16-ம் தேதி இவர்களது வீட்டில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. அப்போது உறவினர்கள் பலரும் வந்து இருந்ததால், குழந்தை ஜாஸாவை யாரும் கவனிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

சிறிது நேரம் கழித்து பார்த்த போது குழந்தை ஜாஸா மயங்கிய நிலையில் கிடந்ததோடு அவருக்கு அருகில், கொசு மருந்து ஒன்றின் பாட்டில் காலியாக கிடந்துள்ளது. இதனால் குழந்தை கொசுமருந்தை தவறுதலாக குடித்திருக்கலாம் என தெரிய வந்ததால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அருகில் இருந்த மருத்துவமனைக்கு குழந்தையைத் தூக்கிச்சென்றுள்ளனர்.

அங்கு குழந்தைக்கு போதிய சிகிச்சை அளிக்காததால், உடனடியாக மற்றொரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனிடையே குழந்தையின் நிலை குறித்த தகவல் அறிந்ததும் தந்தை ரம்ஷீத் உடனடியாக நாடு திரும்பினார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை ஜாஸா இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.