நெற்றியில் பொட்டு.. உதட்டில் லிப்ஸ்டிக்.. காதலிக்காக பெண் வேடமிட்டு தேர்வெழுதி சிக்கிய காதலன்!
பஞ்சாப்பில் காதலிக்காக பெண் வேடமிட்டு தேர்வு எழுத வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் பரீத்கோட் மாவட்டத்தில் கோத்காபுரா நகரில் உள்ள பாபா பரீத் பல்லைக்கழகத்தில் சுகாதார பணியாளர்களுக்கான தேர்வு ஒன்று நடந்தது. இந்த தேர்வில், சந்தேகத்திற்குரிய வகையில் ஒருவர் தேர்வெழுதி உள்ளார். இளம்பெண் போன்று காணப்பட்ட அவரிடம் பயோமெட்ரிக் உபகரணங்கள் உதவியுடன் சோதனை நடத்தியபோது, அவர் ஆண் என்பதும் அவருடைய பெயர் ஆங்கிரெஜ் சிங் என்பதும் தெரிய வந்தது.
பசில்கா பகுதியை சேர்ந்த அவர், ஆதார் மற்றும் வாக்காளர் அட்டைகளை மோசடியாக பயன்படுத்தி போலியான அடையாளம் ஒன்றை உருவாக்கி உள்ளார். அதன்படி தன்னை பரம்ஜித் கவுர் என்ற இளம்பெண்ணாக காட்டி கொண்டார். தந்தை பெயர் பஜன்லால் என குறிப்பிட்டு உள்ளார்.
அவர் நெற்றியில் பொட்டு, சிவப்பு நிற வளையல்கள், லிப்ஸ்டிக் மற்றும் நிறைய முடியுடன் இளம்பெண் போன்று ஆடை அணிந்தபடி தேர்வெழுத இருக்கையில் அமர்ந்து இருக்கிறார். எனினும், சந்தேகத்தின் பேரில் அவர் பிடிபட்டார். இந்த விசயத்தில் பெரிய நெட்வொர்க் இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.
அதனால், இதில் விசாரணை கோரி போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, போலீசார் அந்நபரை உடனடியாக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். உண்மையாக தேர்வு எழுத வேண்டியவரின் விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டு உள்ளது. சிங்குக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.