ஓடும் ரயிலில் இருந்து டிக்கெட் பரிசோதகரை தள்ளி கொலை செய்த வடமாநில பயணி.. கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

 

கேரளாவில் டிக்கெட் பரிசோதனை மேற்கொண்டிருந்த டிக்கெட் பரிசோதகரை வடமாநில பயணி ஒருவர் ரயிலில் இருந்து தள்ளி விட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து பீகார் மாநிலம் பாட்னாவுக்கு பாட்னா அதிவிரைவு ரயில் நேற்று (ஏப்.2) மாலை புறப்பட்டுச் சென்றது. எர்ணாகுளத்தைச் சேர்ந்த வினோத் என்பவர் அந்த ரயிலில் டிக்கெட் பரிசோதிக்கும் பணியில் இருந்துள்ளார். எர்ணாகுளம் முதல் ஈரோடு வரை டிக்கெட் பரிசோதிக்கும் பணி அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. அவர் ஒவ்வொரு கோச்சுக்களிலும் டிக்கெட் பரிசோதித்துக் கொண்டிருந்தார். எஸ்-11 பெட்டியில் அவர் டிக்கெட் பரிசோதனை செய்ய சென்றபோது அங்கு வட மாநில தொழிலாளர்கள் அதிகமாக பயணித்திருக்கிறார்கள். அதில் சிலர் டிக்கட் இல்லாமல் பயணித்ததாக கூறப்படுகிறது.

ரயிலின் வாசலுக்கு அருகே நின்றிருந்த அவர்களிடம் டிடிஇ டிக்கெட் கேட்டதுபோது தகராறு செய்துள்ளார்கள். வாக்குவாதம் முற்றிய நிலையில் வடமாநில தொழிலாளி ஒருவர் வினோத்தை ஓடும் ரயில் இருந்து கீழே தள்ளி விட்டுள்ளார். இதில் வினோத் ரயில் சக்கரத்தில் சிக்கி இறந்துள்ளார்.

அந்த பெட்டியில் இருந்த மற்ற பயணிகள் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ரயில்வே போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஒடிசாவைச் சேர்ந்த ரஜனிகாந்த் என்பவரை பாலக்காட்டில் வைத்து ரயில்வே போலீசார் கைது செய்தனர். ரஜனிகாந்த் மது போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. திருச்சூர் ரயில் நிலையத்திற்கும் பாலக்காடு ரயில் நிலையத்துக்கும் இடையே இந்த சம்பவம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

முளங்குந்நத்துகாவு ரயில் நிலையத்தை ரயில் கடந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வினோத்தின் உடல் மீட்கப்பட்டு திருச்சூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் டிக்கட் எடுக்காமல் முன்பதிவு பெட்டிகளில் பயணிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகவும், அவர்களால் பணம் செலுத்தி முன்பதிவு பெட்டியில் பயணிக்கும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் சம்பவங்களும் அரங்கேறுவது வழக்கம் என்கிறார்கள் ரயில்வே பணியாளர்கள். இந்த நிலையில் டிக்கட் கேட்ட டிடிஇயை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.