இனி நோ ‘குட் மார்னிங்’... ஒன்லி ‘ஜெய்ஹிந்த்’.. பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு!

 

அரியானா மாநில பள்ளிகளில் மாணவர்கள் ‘குட் மார்னிங்’ என்பதற்குப் பதில் ‘ஜெய் ஹிந்த்’ என்று கூறவேண்டும் என அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

நாட்டின் 78-வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இல்லந்தோறும் தேசியக்கொடி இயக்கம் 9-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை கொண்டாடப்படும் என்று ஒன்றிய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 15 முதல் பள்ளிகளில் ‘குட் மார்னிங்’ என்பதற்குப் பதில், ‘ஜெய்ஹிந்த்’ என்று கூறவேண்டும் என சுற்றறிக்கை வெளியிட்டிருக்கிறது. மாணவர்களிடையே தேசபக்தி மற்றும் தேசியப் பெருமிதத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டிருப்பதாக அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், இந்த முயற்சியானது பலதரப்பட்ட மாணவர்களிடையே ஒற்றுமையை வளர்க்கும் என்றும், சுதந்திரத்திற்காகப் போராடியவர்களின் தியாகங்களைப் பற்றி அறிந்துகொள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து தனியார் ஊடகத்திடம் பேசிய மாநில கல்வியமைச்சர் சீமா த்ரிகா, “ஜெய் ஹிந்த் என்று கூறுவதன் மூலம், நமது எல்லைகளைக் காக்கும் ராணுவ வீரர்களை மாணவர்கள் நினைவுகூர வேண்டும் என்று விரும்புகிறோம். ராணுவ வீரர்களைக் கௌரவிப்பதன் மூலம், நமது மாணவர்கள் இயல்பாகவே ஒழுக்கமுடையவர்களாக மாறுவார்கள். மேலும், ‘ஜெய் ஹிந்த்’ என்பது தேசபக்தி உணர்வைத் தூண்டும்.

அதோடு, தேசத்தைக் கட்டியெழுப்புவதில் மாணவர்களின் எதிர்கால பங்களிப்பைக் கருத்தில் கொண்டு அவர்களை உருவாக்க வேண்டும். அதேபோல், குறைந்தபட்சம் அனைத்து அரசு ஊழியர்களும் நமது ஆயுதப் படைகளைப் போலவே மற்ற வணக்கங்களுக்குப் பதிலாக `ஜெய் ஹிந்த்’ என்று கூறத் தொடங்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்.” என்றார்.