மோடி 3.0-வில் மீண்டும் நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன்.. அமைச்சரவை பட்டியல் வெளியீடு!

 

மோடி 3.0 அமைச்சரவையின் இலாக்கா ஒதுக்கீட்டில், பெரும் மாற்றமின்றி பிரதான அமைச்சர்களின் பொறுப்புகள் தொடர்கின்றன.

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதையடுத்து, தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அவர் மத்தியில் ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதையடுத்து, மோடியை ஆட்சியமைக்க குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அழைப்பு விடுத்தார்.

அதன்படி, குடியரசு தலைவர் மாளிகையில் நேற்று இரவு 7.15 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற்றது. அதில், மோடி 3-வது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்றார். குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, மோடிக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அவருடன் 71 ஒன்றிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

இதனிடையே, பாஜக அரசில் பதவியேற்ற ஒன்றிய அமைச்சர்கள் யாருக்கு எந்த இலாகா ஒதுக்கப்படும் என்பதில் பரபரப்பு நீடித்து வந்தது. இந்த நிலையில், அந்த பரபரப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒன்றிய அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் அமித்ஷா, ஜெய்சங்கர், ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட சில அமைச்சர்கள் ஏற்கனவே வகித்த துறையை மீண்டும் ஏற்றுள்ளனர். சிலருக்கு இலாகா மாற்றப்பட்டு புதிய இலாகா வழங்கப்பட்டுள்ளது.


பிரதமர் மோடி மத்திய பணியாளர் நலன், அணுசக்தி துறை, விண்வெளி துறை ஆகிய துறைகளை மீண்டும் தன்வசமே வைத்துக் கொண்டார். மேலும், முக்கிய கொள்கை விவகாரம் மற்றும் ஒதுக்கப்படாத துறைகளை பிரதமர் மோடியே கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.