கேரளாவில் நிபா வைரஸ்.. இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிப்பு

 

கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்று காரணமாக பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு 2 நாட்கள் விடுமுறை அளித்துள்ளது.

கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 2 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இரண்டாவதாக உயிரிழந்த நபரின் குடும்பத்தைச் சேர்ந்த 9 வயது குழந்தை உட்பட 4 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், இரண்டு பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, கேரள சுகாதார அமைச்சகம் நிபா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தீவிர கட்டுப்பாடு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. கோழிக்கோட்டில் 9 கிராம பஞ்சாயத்துகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் நிபா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் பகுதிகளில் உள்ள சில அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் அதிகாரிகளால் மூடப்பட்டன.

இந்த நிலையில், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள தொழில்முறை கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் (அங்கன்வாடிகள் உட்பட) இன்றும் (செப். 14), நாளையும் (செப். 15) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் வகுப்புகளை ஏற்பாடு செய்யவும், விடுமுறையால் பல்கலைக்கழக தேர்வுகளில் எந்த மாற்றமும் இல்லை என்றும் கோழிக்கோடு மாவட்ட ஆட்சியர் கீதா அறிவித்துள்ளார்.