காதலியை அழைத்து வர எதிர்ப்பு தெரிவித்த தாய்.. கழுத்தை நெரித்துக் கொன்ற மகன்.. ம.பி.யில் அதிர்ச்சி சம்பவம்!

 

மத்தியப் பிரதேசத்தில் காதலியை வீட்டுக்கு அழைத்து வர அனுமதி மறுத்த தாயை, மகன் அடித்துக் கொன்ற சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஷபரி நகரில் வசித்து வந்தவர் நந்தா மோரே. இவரது மகன் ரௌனக் மோரே (19). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு‌ பெண்ணை காதலித்து வந்திருக்கிறார். பிப்ரவரி 14 காதலர் தினம் என்பதால், அன்று தன் காதலியை இரவு நேரத்தில் வீட்டிற்கு அழைத்து வரத் திட்டமிட்டிருக்கிறார். இது குறித்து தன் அம்மாவிடம், ‘என் காதலியைக் காதலர் தினத்தன்று நம் வீட்டிற்கு அழைத்து வரவிருக்கிறேன். சிறிது நேரம் கழித்து மீண்டும் அவளை அனுப்பி விடுவேன்’ எனக் கூறியிருக்கிறார்.

இதை விரும்பாத அவரின் அம்மா நந்தா, இதற்கு அனுமதிதர மறுத்திருக்கிறார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. அப்போது ரௌனக் மோரே, அம்மா நந்தாவைக் கீழே தள்ளி விட்டிருக்கிறார். அதனால், நந்தாவின் உதடு பகுதியில் காயங்கள் ஏற்பட்டிருக்கிறது. கோபமடைந்த நந்தா எழுந்து ரௌனக் மோரேவை அறைந்திருக்கிறார். அப்போது ஆத்திரமடைந்த ரௌனக் மோரே, துணியால் அவரின் அம்மா நந்தாவின் கழுத்தை இறுக்கி, அவரைக் கொலை செய்திருக்கிறார். மேலும், அன்றிரவு தன் தாயின் சடலத்துக்கு அருகிலேயே ரௌனக் உறங்கியிருக்கிறார்.

மறுநாள் காலை வீட்டுக்கு வந்த நந்தாவின் மருமகன், நந்தா இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், நந்தாவின் உதடு மற்றும் கழுத்து பகுதியில் காயங்கள் இருப்பதைக் கண்டு சந்தேக மரணம் என வழக்குப் பதிந்தனர். மேலும், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். நந்தாவின் அக்கம் பக்கத்து வீட்டாரிடம் விசாரித்ததில், “நந்தாவுக்கும் அவரின் மகன் ரௌனக் மோரேவுக்கும் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படும். அவர் மீது சந்தேகம் இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளனர்.

அதன் அடிப்படையில், ரௌனக் மோரேவிடம் போலீசார் விசாரணை செய்தபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்திருக்கிறார். இதற்கிடையில், நந்தாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது, அதில், “நந்தா மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார். கழுத்துப் பகுதியில் காயங்கள் இருப்பதால், அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதன் பிறகே ரௌனக் மோரே தன் தாயைக் கழுத்தை நெரித்துக் கொன்ற குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

இது குறித்துப் பேசிய போலீசார், “தன் காதலியை இரவு நேரத்தில் வீட்டிற்கு அழைத்து வருவது குறித்த திட்டத்திற்குத் தாய் எதிர்ப்பு தெரிவித்ததால், தாயின் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார். இவர் மீது ஏற்கனவே கொலை முயற்சி வழக்கு, போக்சோ வழக்குகள் உள்ளது. ரௌனக் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தற்போது கொலை வழக்கு பதிவு செய்து, அவரைக் கைது செய்திருக்கிறோம்” எனக் குறிப்பிட்டிருக்கின்றனர். பெற்ற மகனே தாயைக்‌ கொன்ற சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.