4 பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்த தாய்.. 4 குழந்தைகள் பரிதாப பலி.. கணவர் தாக்கியதால் நடந்த சோகம்!

 

மத்திய பிரதேசத்தில் கணவர் தாக்கியதால் பெண் தனது பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதில் 4 குழந்தைகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் மண்டோசோர் மாவட்டம் பின்பல்ஹடா கிராமத்தை சேர்ந்தவர் ரொடு சிங். இவரது மனைவி சுகுனா பாய் (40). இந்த தம்பதிக்கு அரவிந்த் (11), அனுஷா (9), பிட்டு (6), கார்திக் (3) என மொத்தம் 4 பிள்ளைகள் உள்ளனர். இதனிடையே, ரொடு சிங்கிற்கும் அவரது மனைவி சுகுனா பாய்க்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம், சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போதெல்லாம் சுகுனா பாயை ரொடு சிங் தாக்கியுள்ளார்.

இந்த நிலையில், ரொடு சிங்கிற்கும், சுகுனா பாய்க்கும் நேற்று மாலை மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது மனைவியை ரொடு சிங் கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் மனமுடைந்த சுகுனா தனது 4 குழந்தைகளை அழைத்துக்கொண்டு மாலை வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

பின்னர், ஊரில் உள்ள பள்ளிக்கூடத்தில் இரவு தங்கிய சுகுனா பாய் அதிகாலை கிராமத்தில் உள்ள கிணற்றில் 4 பிள்ளைகளுடன் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் கிணற்றில் குதித்த 5 பேரையும் காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால், இந்த சம்பவத்தில் தண்ணீரில் மூழ்கி 4 பிள்ளைகள் உயிரிழந்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் தத்தளித்துக்கொண்டிருந்த சுகுனா பாயை அக்கம் பக்கத்தினர் மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து உயிரிழந்த 4 பிள்ளைகளின் உடலை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.