காணாமல் போன 7 வயது சிறுமி.. 2 நாட்களுக்கு பின் சாக்கு மூட்டையில் சடலமாக மீட்பு.. கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்

 

கர்நாடகாவில் 7 வயது சிறுமியை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி வீசிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

கர்நாடக மாநிலம் கொப்பால் மாவட்டம் கின்னலா கிராமத்தைச் சேர்ந்தவர் ராகவேந்திரா மடிவாளா. இவரது மகள் அனுஸ்ரீ (7). கடந்த 19-ம் தேதி காலை விளையாட வெளியே சென்றுள்ளார். அவர், மதியம் வரை வீடு திரும்பாததால் குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினர் பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் எங்கும் சிறுமியை காணாத நிலையில், அன்று மாலை கொப்பால் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு, சிறுமியை பல இடங்களிலும் தேடிவந்தனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை காணாமல் போன சிறுமியின் வீட்டருகே உள்ள காலியிடத்தில் சாக்கு மூட்டை ஒன்று கிடந்ததை பார்த்துள்ளனர். அப்போது சாக்கு மூட்டையில் சிறுமியின் கால் தென்பட்ட நிலையில், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யசோதா தலைமையிலான போலீசார், மூட்டையை பிரித்து சோதனை செய்தனர். அப்போது அதில், காணாமல் போன சிறுமி சடலமாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் சடலத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து எஸ்.பி யசோதா கூறுகையில், “குழந்தையை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்துள்ளனர். இரண்டு நாட்களாக குழந்தையை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் சிறுமியின் உடல் மூட்டையில் இருப்பதாக தகவல் கிடைத்தது. பெற்றோரும், சிறுமியின் உடலை அடையாளம் காட்டினர். பல்லாரியில் இருந்து தடய அறிவியல் ஆய்வக ஊழியர்கள் வந்து ஆய்வு செய்கின்றனர். போலீசார் விசாரிக்கின்றனர். சந்தேகப்படும் நபர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. விரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவார்” என்றார்.

சிறுமியின் தந்தை ராகவேந்திரா மடிவாளா கூறுகையில், “யார் மீதும் எனக்கு வெறுப்பு இல்லை. காலையில் எழுந்தவுடன் பணிக்கு சென்று, இரவு தான் வீடு திரும்புவேன். எங்கள் குடும்பத்துக்கு எதிரிகள் யாரும் இல்லை. எதற்காக என் மகள் கொலை செய்யப்பட்டார் என்று தெரியவில்லை” என்றார்.