கேரளாவில் பயங்கர நிலச்சரிவு.. பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு

 

கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 56 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக அங்கு கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில், கேரளாவின் வயநாடு பகுதியில் நேற்று இரவு மிக கனமழை பெய்தது. இதன் காரணமாக வயநாடு சூரல்மலை பகுதியில் நேற்று காலை முதலே லேசான நிலச்சரிவுகள் ஏற்பட்டன. அப்பகுதியில் இடைவிடாமல் கனமழை பெய்து காட்டாறுகளில் வெள்ளம் கரை புரண்டோடியது. 

இதனால் இன்று அதிகாலை 2 முறை சூரல்மலை பகுதியில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் சிக்கின. இந்த வீடுகளில் சிக்கிய 1,000-க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணிகளில் கேரளா மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவில் சிக்கி இதுவரை பலியானோர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை ஹெலிகாப்டர் மூலமாக மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

முன்னதாக தமிழ்நாட்டின் கோவை சூலூர் விமான படை தளத்தில் இருந்து விமானப் படையின் இரண்டு ஹெலிகாப்டர்கள் உடனடியாக வயநாடு பகுதிக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் இறங்கியது. சூரல்மலை பகுதியில் மிக முக்கியமான தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. இதனால் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களை மீட்க முடியாத நிலைமை உள்ளது. இதையடுத்து அப்பகுதியில் பேரிடர் மீட்புக் குழுவினர் தற்காலிக பாலத்தை அமைத்தும் வருகின்றனர்.

சூரல்மலை பகுதியில் மிக முக்கியமான தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. இதனால் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களை மீட்க முடியாத நிலைமை உள்ளது. இதையடுத்து அப்பகுதியில் பேரிடர் மீட்புக் குழுவினர் தற்காலிக பாலத்தை அமைத்தும் வருகின்றனர். 

கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், மாநில சுகாதாரத்துறை மாவட்டங்களில் கட்டுப்பாட்டு அறைகளை திறந்துள்ளது. 8086010833, 9656938689 ஆகியவை உதவி எண்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.வைத்திரி, கல்பட்டா, மேப்பாடி, மனந்தவாடி மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளன. அனைத்து நிலை சுகாதாரப் பணியாளர்களும் ஏற்கனவே வரவழைக்கப்பட்டுள்ளனர் என்றார்.