சபரிமலையில் நாளை மண்டல பூஜை.. ஐயப்பனை தரிசிக்க குவியும் பக்தர்கள் கூட்டம்!

 

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளைய தினம் மண்டல பூஜை நடைபெற உள்ளதை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்

கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலையில் பிரம்மச்சாரியாக தர்மசாஸ்தாவான ஐயப்பன் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு யோக சின் முத்திரை தாங்கி, எல்லோருக்கும் கேட்டதை வாரி வழங்கும் வள்ளலாக காட்சி தருகிறார். ஆண்டு தோறும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் 48 நாட்கள் விரதம் இருந்து தரிசனம் செய்ய மலையேறி வருகின்றனர்.

கடந்த நவம்பர் 16-ம் தேதியன்று இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறக்கப்பட்டது. 17-ம் தேதி முதல் பக்தர்கள் இருமுடி சுமந்து வந்து ஐயப்பனை தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில், தங்க அங்கியுடன் கூடிய ஊர்வலம் கடந்த 23-ம் தேதி காலை ஆரன்முளா ஸ்ரீ பார்த்தசாரதி கோவிலில் இருந்து புறப்பட்டது.

தொடர்ந்து இன்று (டிச. 26) மாலை தங்க அங்கி ஊர்வலம் சன்னிதானம் வந்தடைவதால் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இன்று மாலை 3 மணிக்கு பதிலாக 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. தங்க அங்கி ஊர்வலத்தை தேவசம் அதிகாரிகள் வரவேற்று பின்னர் தங்க அங்கியை கோவில் கருவறைக்குள் எடுத்து செல்வர்.

தொடர்ந்து மாலை 6.30 மணியளவில் ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும். மேலும், நாளை (டிச. 27) காலை 10.30 - 11.30 மணியளவில் மண்டல பூஜை நடைபெறும்.  மண்டல பூஜையை முன்னிட்டு காலை நெய்யபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து  இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு மண்டலக்காலம் நிறைவு பெறும்.

மீண்டும் வரும் 30-ம் தேதி மாலை மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும். மண்டல பூஜையை ஒட்டி இன்று (டிச. 26) மற்றும் நாளை (டிச. 27) ஆன்லைன் முன் பதிவு செய்ய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இன்று 64 ஆயிரம் பக்தர்கள் மற்றும் நாளை 70 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே ஆன்லைன் முன்பதிவு மூலம் செல்ல முடியும். இந்த நிலையில் நேற்று (டிச. 25) ஒரே நாளில் 1 லட்சத்து 909 பேர், சுமார் 20 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.